Pyar Prema Kalyanam Review: பியார் பிரேமா கல்யாணம் விமர்சனம்.. வீட்டோட மாப்பிள்ளை பரிதாபங்கள்!
சென்னை: பியார் பிரேமா காதல், ஸ்டார் படங்களை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கி நடித்துள்ள பியார் பிரேமா கல்யாணம் திரைப்படம் சற்றுமுன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்த படத்தில் இளனுக்கு ஜோடியாக குடும்பஸ்தன் படத்தில் அசத்திய சான்வீ மேக்னா நடித்துள்ளார்.
மேலும், ராதிகா சரத்குமார், செந்தில், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், யோகி பாபு, மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காலம் காலமாக திருமணமாகி பெண்கள் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் வழக்கத்தை மாற்றியமைத்து, பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகின்றனரோ அந்த கஷ்டங்களை எல்லாம் ஆண்கள் சந்தித்தால் எப்படி இருக்கும் என்கிற சவுக்கடி கதையை இளன் எப்படி கொடுத்துள்ளார் என்கிற விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
பியார் பிரேமா கல்யாணம் கதை: துபாயில் வேளை பார்த்துக் கொண்டிருக்கும் இளன் அந்த வேலை பிடிக்காமல் வீட்டுக்கு வந்து விடுகிறார். இங்கே அவருக்கு ஒரு பெண் பார்க்கின்றனர். ஆனால், பெண் பார்க்கச் செல்லும் இளன் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் பவி (சான்வீ மேக்னா) தான் பெண் என தவறாக நினைத்து அவர் மீது காதலில் விழுகிறார். ஆனால், அப்பா எம்.எஸ். பாஸ்கர் பார்க்கச் சொன்ன பெண் வேறு என்பது தெரிந்ததும், அந்த பெண்ணை அவாய்ட் பண்ண இவர் பேசுவதை சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான பவி வீடியோவாக எடுத்துப் போட்டு ரெட் ஃபிளாக் என இளன் ஒரு ஆணாதிக்கவாதி என வீடியோ வெளியிட்டு அசிங்கப்படுத்து விடுகிறார்.
பவியை தேடிப் பிடித்து, அவரை காதலிக்கும் விஷயத்தை இளன் சொன்னதும் பவிக்கும் அவரை பிடித்து விட இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் வரை அமைதியாக இருக்கும் பவி மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்ததும், அவரது அம்மா ராதிகாவின் கண்ணீரை பார்த்ததும் மண்டபத்தை விட்டு தெறித்து ஓடுகிறார்.
அதற்கான காரணத்தை இளன் கேட்க, என்னால எங்க வீட்டை விட்டு வர முடியாது என சொல்லும், ஹீரோயின், நீ எங்க வீட்டுக்கு வா என சொல்கிறார். பவி மீதான காதல் காரணமாக வேலை வெட்டி இல்லாத ஹீரோ ஹீரோயின் வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையாக செல்ல அங்கே அவருக்கு நடக்கும் கொடுமைகள், அதன் பின்னர் கிளைமேக் என்ன ஆகிறது என்பது தான் இந்த பியார் பிரேமா கல்யாணம் படத்தின் கதை.
பார்க்கலாமா? வேண்டாமா?: படமாக ஆரம்பத்தில் இருந்தே இளனின் நடிப்பு பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை என்றாலும், கதையாகவும் சொல்ல வந்த விஷயங்கள் மூலமாகவும் பல காலமாக பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டில் பெண்கள் சென்று படும் கஷ்டங்களை ஜெண்டர் மாற்றி காட்டிய விதம் சிறப்பாக உள்ளது.
அதிலும், கிளைமேக்ஸில் இதற்கு ஒரு சூப்பரான தீர்வையும் இயக்குநர் வைத்த விதம் இந்த கதைக்கு தேவையான கிளைமேக்ஸ் ஆக உள்ளது. ஆனால், அதன் பின்னர், வரும் அந்த ஒரு காட்சி அந்த கிளைமேக்ஸையும் ட்ரோல் செய்து விடுகிறது. கடைசியில் டைரக்டர் என்ன தான் சொல்ல வராரு? என்கிற கேள்வியையும் திருமணம் செய்துக் கொண்டாலே சங்கடம் தான் என்கிறாரா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தை டைம் கிடைத்தால் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.