📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 22, 2026 12:05 AM

மொத ராத்திரி விமர்சனம்: கலகல காமெடி விருந்தும், மொய் வைக்கப்படும் மெசேஜும்! கல்யாணம் களைகட்டுகிறதா?

மொத ராத்திரி விமர்சனம்: கலகல காமெடி விருந்தும், மொய் வைக்கப்படும் மெசேஜும்! கல்யாணம் களைகட்டுகிறதா?

மொத ராத்திரி விமர்சனம்: கலகல காமெடி விருந்தும், மொய் வைக்கப்படும் மெசேஜும்! கல்யாணம் களைகட்டுகிறதா?

கட்டாயக் கல்யாணம் நடைபெற்ற அன்றிரவே காதலனுடன் சென்றுவிட வேண்டும் என்று எண்ணும் முத்துச்செல்விக்கு மருதநாயகம் எப்படி உதவுகிறார் என ஓர் இரவில் நடக்கும் கதையைப் பதற்றமும் காமெடியும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்பசாமி.

துபாயிலிருந்து திரும்பி வரும் மருதநாயகத்திற்கு (ரிஷிகாந்த்) திருமணம் செய்துகொள்வதில் துளியும் இஷ்டமில்லை. அவருக்குத் தெரியாமல் திருமண ஏற்பாடு செய்கின்றனர் அவருடைய குடும்பத்தினர். மற்றொரு பக்கம், காதலித்தவனுடன் சேரவிடாமல் முத்துச்செல்வியை (அனிஷ்மா) மருதுக்குத் திருமணம் செய்துவைக்க அவருடைய குடும்பத்தினர் வேலைகளைக் கவனிக்கின்றனர்.

மணமகனுக்கும் மணமகளுக்கும் துளியும் விருப்பமில்லாமல் திருமணமும் நடந்து முடிந்துவிடுகிறது. திருமணமான அன்று இரவே தான் காதலனுடன் சென்றுவிட வேண்டுமெனத் திட்டமிடுகிறார் முத்துச் செல்வி. அவர் நினைத்ததைச் செய்து முடித்தாரா என்பதை ஒரே நாளில் நடக்கும் கதையாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி.

விருப்பமின்மையால் ஏற்படும் சலிப்பு, மனைவியோடு சகஜமாகிக்கொள்ள அவரிடம் நீட்டும் கட்டாயப் புன்முறுவல், மனைவியின் செயலால் உண்டாகும் ஏமாற்றம், குடும்பத்தினர் மீது அள்ளித் தெளிக்கும் கோபம் என உணர்வுத் தோரணங்களைப் பந்தல் முழுக்க அலங்கரித்திருக்கிறார் நாயகன் ரிஷிகாந்த். எமோஷனல் பந்தியிலும் தேவையானதைப் பரிமாறியிருக்கிறார். வெல்கம் ஹீரோ ரிஷிகாந்த்! படம் முழுக்கப் பேச்சிலும் உடல் மொழியிலும் எப்போதும் பதற்றத்தையும் ஆற்றாமையையும் பிடித்துக்கொண்டே நகரும் முத்துச்செல்விக்கு உயிர் தந்திருக்கிறார் அனிஷ்மா. 'எனக்கு பிடிச்சதை பண்ணினது தப்பா' எனச் சமூகக் கட்டமைப்புகளைக் கேள்வி எழுப்பும் காட்சியிலும் கிளாப்ஸ் வாங்குகிறார். மணமேடையில் போடும் குத்தாட்டம், க்ளைமாக்ஸ் அலறல் இரண்டுமே ஆற்றாமையின் வெளிப்பாடு! ஆனால், தென்மாவட்ட வட்டார மொழி மட்டும் இவரிடத்தில் துருத்தலாகத் தெரிகிறது.

தன்னுடைய பொருளாதார நிலை உருவாக்கும் பயத்துடன் நகைச்சுவையையும் குறைவின்றி கலந்து கட்டித் தந்திருக்கிறார் ராஜா கருப்பசாமி (இவரே இப்படத்தின் இயக்குநர்). எந்நேரமும் கல்யாண வீட்டில் ஆவலாதி இழுக்கும் கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள் ரகளையைக் கூட்ட, மற்றொரு பக்கம் அப்துல் லீ காமெடி நாதஸ்வரத்தை ஸ்ருதியோடு வாசித்திருக்கிறார். இவர்களைத் தாண்டி, சேத்தன், ஏ. வெங்கடேஷ், ஷெல்லி கிஷோர், சுமித்ரா தேவி, சங்கீதா பாலன், கார்த்திக், வர்ஷினி கார்மேகம் ஆகியோர் அவரவர் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சூப்பர்வே மக்கா!

இரவு முழுக்க நகரும் கதைக்கு, மின்னல் வெட்டும் வெளிச்சமும், விளக்கொளியும் தந்து விஷுவல்களைப் பிரகாசமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி. வெவ்வேறு இடங்களில் நடக்கும் கதையை முக்கோணமாக அடுத்தடுத்து நகர்த்தி கெட்டித்தனம் காட்டும் படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன், சில இடங்களில் தேங்கி நிற்கும் காட்சிகளை வலுக்கட்டாய சீராகக் கொடுத்துவிட்டுப் போகிறார். 'டை டக்கா' பாடல் மூலமாகக் கொண்டாட்ட மேடை அமைக்கும் இசையமைப்பாளர் பரத் சங்கர், 'முதலா முடிவா' பாடல் மூலம் எமோஷனையும் பன்னீர் போல் மென்மையாகத் தெளிக்கிறார். 'மாரியம்மன் இந்தியன் பேங்க்', தூத்துக்குடி 'கிளியோபட்ரா' தியேட்டர் போஸ்டர்கள் என சைலண்டாகக் கவனம் ஈர்க்கிறார் கலை இயக்குநர் பாலு மகேந்திரா.

காதலியைக் கரம்பிடிக்க ஓடோடி வரும் காதலனுக்கு வழியில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்னைகள், கணவன் வீட்டிலிருந்து முத்துச்செல்வி தப்பிக்கத் திட்டமிடும் பகுதிகளில் லேசாகப் பதற்றமும் மூள்கிறது. ஆனாலும் அந்த இரவில் காதலனுக்கு மட்டும் தேடித் தேடி பிரச்னைகள் வருவது லாஜிக் இல்லை ப்ரோ! இரண்டாம் பாதியில் எமோஷனல் விஷயங்களைத் துணைக்கு இழுத்துக்கொள்கிறது திரைக்கதை. ஆனால் அதில் சொல்லப்படும் விஷயங்கள் ரிப்பீட் அடிப்பதால், இரண்டாம் பாதி ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் உணர்வைத் தருவதோடு, சோம்பலையும் மொய்யாக எழுதுகிறது. கிளைமாக்ஸ் முடிவை இன்னும்கூட தெளிவாகச் சொல்லியிருக்கலாமே இயக்குநரே!

ஆனால், சாதிய எண்ணம் தனக்கில்லை எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்கள் கடைபிடிக்கும் 'சீட்' இடைவெளி, ஆணாதிக்க எண்ணம்கொண்டு பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறைகள், சிதைக்கப்படும் அவர்களின் கனவுகள் ஆகியவற்றையும் காட்சிகளின் வழியே அழுத்தமாகச் சொல்கிறது படம். அத்தோடு, திருமண நிகழ்வுகளில் கௌரவத்தை மட்டுமே முதன்மைப்படுத்துவது, அதனால் உண்டாகும் பிரச்னைகள், அந்தப் பிரச்னையில் தொடர்புடையவர்களையும் தொடர்பில்லாதவர்களையும் அது எப்படிப் பாதிக்கிறது என்பதையும் பகடி செய்கிறது இந்த 'மொத ராத்திரி'.