📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 12, 2026 11:04 AM

பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை தி.மு.க., வெளியிடாதது ஏன்? எ.வ.வேலு விளக்கம்

பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை தி.மு.க., வெளியிடாதது ஏன்? எ.வ.வேலு விளக்கம்

சென்னை: 'சட்டசபை தேர்தலின் போது, பயிர் கடன் தள்ளுபடி குறித்து, தி.மு.க., வாக்குறுதி அளிக்காதது ஏன்' என்ற அமைச்சரின் கேள்விக்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: விவசாய கடன் தள்ளுபடி செய்ய, முதல்வர் ஒரு முயற்சி எடுத்தார். மொத்தம் 5,932 கோடி ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், விவசாய பயிர் கடன் தள்ளுபடி குறித்து சொல்லவே இல்லை. நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலையை முதல்வர் உயர்த்தியுள்ளார்.

நாம் யாரும் ரேஷன் அரிசியை வாங்கி சாப்பிடுவதில்லை. இலவச ரேஷன் அரிசி சாப்பிடும் அளவிற்கு தரமாக இல்லை என்பது, முதல்வரின் கவனத்திற்கு வந்துள்ளது.

எனவே தான், சன்னரக நெல் கொள்முதல் விலையை, அவர் உயர்த்தியுள்ளார். அந்த நெல்லை கொள்முதல் செய்து, அரிசியாக்கி, பொது மக்களுக்கு கொடுக்குமாறு கூறியுள்ளார்.

தமிழகத்தில் கரும்பு சாகுபடி, 70 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து தான் ஆலைகளுக்கு கரும்பு வருகிறது. பல ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அதற்காகவே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தி.மு.க., - எ.வ.வேலு: தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளை குறு, சிறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என, நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. கடந்த 2006ம் ஆண்டு, 7,000 கோடி ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளும் பயன் பெற்றனர்.

இப்போது விவசாயிகளை பிரித்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் போராட்டங்கள் நடக்கின்றன. ஆட்சியில் இருந்த காரணத்தால், நிதி அமைச்சரை அழைத்து, 19,000 கோடி ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்ய முடியுமா என்று கேட்டோம்.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று அவர் கூறி விட்டார். அதனால், தேர்தல் அறிக்கையில் பயிர் கடன் தள்ளுபடி பற்றி குறிப்பிடவில்லை.

நானும் கரும்பு விவசாயி தான். கரும்புக்கான உற்பத்தி செலவும், விற்பனை செலவும், 'மேட்ச்' ஆகவில்லை. இதனால், பல தனியார் ஆலைகள் மூடப்பட்டன.

மஹாராஷ்டிராவில் விளையும் கரும்புகளில் அதிக சர்க்கரை கிடைக்கிறது. நமக்கு கட்டுப்படியாகவில்லை என்பதால், கரும்பு உற்பத்தியை பெருக் குவதற்கு ஊக்கத்தொகை வழங்கினோம். நீங்கள் இன்னும் அதிகமாக கொடுத்தால், அதை நாங்கள் வரவேற்கிறோம்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: மஹாராஷ்டிராவில் கரும்புக்கு கூட்டுறவு சங்கம் உருவாக்கி, நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தினர்.

இதனால், கரும்பு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. முதல்வர் விஜய் அறிவித்துள்ள திட்டங்களால், மஹாராஷ்டிராவிற்கு இணையாக தமிழகம் வரும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.