📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 23, 2026 02:33 AM

பழநி மடம் நில மோசடி வழக்கு: முக்கிய ஆவணங்களை பெற்ற சிபிசிஐடியினர்

பழநி மடம் நில மோசடி வழக்கு: முக்கிய ஆவணங்களை பெற்ற சிபிசிஐடியினர்

திண்டுக்கல்: பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பு நிலம், மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி., போலீசார் வருவாய்த்துறை அலுவலர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களை பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமி மடம் உள்ளது. இம்மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.40 ஏக்கர் நிலத்தை மோசடியாக திருப்பூர் மாவட்டம், உடுமலை பாப்பான்குளம் வெள்ளத்துரை, பழனி ஆயக்குடி டி.கே.என்.புதுார் சேதுபதி ஆகிய இருவருக்கு ஜூலை 6ல், 2 கோடி ரூபாய்க்கு கிரயமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

பழநி அடிவாரம் போலீசார் விசாரித்த இவ்வழக்கு, டி.ஜி.பி., உத்தரவில் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., சஜிதா தலைமையில் டி.எஸ்.பி., அஜய்தங்கம் மேற்பார்வையில், 5 இன்ஸ்., உள்ளிட்ட போலீசார் ஏழு நாட்களாக இவ்வழக்கை விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இதில், போலீசார் விசாரணைக்கு உதவ நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் தனி தாசில்தார் சஞ்சய்காந்தி மற்றும் பழனி பறக்கும்படை தனி தாசில்தார் பிரசன்னா, ஆதிதிராவிடர் நலத்துறை சார் ஆய்வாளர் ரத்தினசாமி, ஒட்டன்சத்திரம் வட்ட வழங்கல் அலுவலர் உஷா, சர்வேயர் செல்லத்துரை ஆகியோரிடம் இருந்து இவ்வழக்கிற்கு தேவையான ஆவணங்களை பெற்று, பதிவு செய்தனர்.

முதன்முதலில் தண்டபாணி சுவாமி மடத்தின் பெயர் வைத்ததற்கான ஆவணம், மடத்தின் சொத்து ஆவணங்கள், பிரச்னைக்குரிய நிலம் இருவரது பெயரில் மோசடியாக மாற்றப்பட்டதற்கான ஆவணங்களும் பெறப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இம்மோசடி பத்திரப்பதிவு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி., சுதா மால்யா, உதவி ஐ.ஜி.,க்கள், பூங்கொடி, கண்ணன் அடங்கிய உயர்மட்ட குழுவினர், பழனி பதிவுத்துறை அலுவலகத்தில், 3வது நாளாக விசாரணை நடத்தினர்.