📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 07, 2026 08:34 PM

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நீதிமன்ற காவல்

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நீதிமன்ற காவல்

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நீதிமன்ற காவல்

ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Published : August 7, 2026 at 7:26 PM IST

திண்டுக்கல்: பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டனை ஆகஸ்ட் 21 வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி கோயில் உலக புகழ் பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்றாகும். இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இந்நிலையில், பழனி கோயில் அடிவாரத்தில் உள்ள சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் சிபிசிஐடி காவல் துறையினர், பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை முறைகேடாக வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் துறைரீதியான விசாரணைக்குப் பிறகு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், நில மோசடி வழக்கு தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரையும் சிபிசிஐடி காவல் துறையினர் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி பாக்யராஜ் இன்று (ஆகஸ்ட் 7) அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டார்.

பின்னர், அவரை சிபிசிஐடி காவல் துறையினர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். ஜஸ்டின் மணிகண்டன் உடல்நிலை சரியாகும் வரை நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.