📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 31, 2026 09:33 PM

பழநி நில மோசடி விவகாரத்தில் சிக்கிய சார்

பழநி நில மோசடி விவகாரத்தில் சிக்கிய சார்

சென்னை: பழநி கோவில் நில மோசடி விவகாரத்தில் சிக்கிய, சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்வதற்காக, சிறப்பு தணிக்கை குழு அமைத்து, பத்திரப்பதிவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பழநி தண்டபாணி கோவிலுக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில், சட்ட விரோதமாக நில பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் பழநியில் சார் - பதிவாளராக பொறுப்பேற்ற, 2024, பிப்ரவரி முதல், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நாள் வரையிலான காலகட்டத்தில், பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் அவரால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து, முழுமையாக ஆய்வு செய்ய, பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க, சிவகங்கை உதவி பதிவுத்துறை தலைவர் சீனிவாசன் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில், திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் சுவாமிநாதன், சேலம் மேற்கு சார் - பதிவாளர் கீதா, விருதுநகர் சார் - பதிவாளர் காஜா முஹைதீன், விருதுநகர் சார் - பதிவாளர் அலுவலக உதவியாளர் மோகன்ராஜ், திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் அலுவலக உதவியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர், பழநி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சிறப்பு தணிக்கை முடிவடைந்து, அதன் விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.