ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை
ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை
சென்னை: விலை உயர்வை கருத்தில் கொண்டு நியாய விலை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு போக்குவரத்து மூலமாக மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கையின் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த 10ம் தேதி முதல் சென்னையிலும், 11ம் தேதி முதல் இதர மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
குடும்ப அட்டைதாரர்கள் வெங்காயத்தை பெற்று பயன்பெறலாம். இந்த நடவடிக்கையின் மூலம், வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார சுமையைக் குறைத்து, குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.
அதன்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் மூலம் இயங்கும் நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.