📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 02, 2026 11:33 PM

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய இன்று கடைசி வாய்ப்பு: வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்வது? அதிகாரி விளக்கம்

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய இன்று கடைசி வாய்ப்பு: வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்வது? அதிகாரி விளக்கம்

சென்னை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைப் பயனாளிகள் அனைவருக்கும் மின்னணு முறையில் வாடிக்கையாளரை அறிதல் (e-KYC) நடைமுறையை முறைப்படுத்துவதற்காக, அரசு சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பொது விநியோகத் திட்டத்தின் நன்மைகள் தங்கு தடையின்றி உரிய நபர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய, குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ளாத பொதுமக்களின் வசதிக்காகவே இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலை, கல்வி அல்லது பிற காரணங்களுக்காகச் சொந்த ஊரை விட்டு வெளியேறி, சென்னையில் தற்காலிகமாக வசித்து வரும் ரேஷன் அட்டைதாரர்கள் இதற்காகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தற்போது தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடைகளுக்கும் (ரேஷன் கடை) நேரில் சென்று தங்களின் கைவிரல் ரேகையைச் சுலபமாகப் பதிவு செய்து கொள்ளலாம். அரசு வழங்கும் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, ரேஷன் அட்டையில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விடுபடாமல் தங்களது விரல் ரேகையைப் பதிவு செய்து இ-கே.ஒய்.சி முறையை முழுமையாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் செல்ல வேண்டும். விரல் ரேகை பதிவு செய்ய ரேஷன் அட்டை, ஆதார் அட்டை எடுத்துச்செல்ல வேண்டும்.