📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 23, 2026 03:02 PM

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் - குல்தீப் யாதவ் மெகா ஐபிஎல் ட்ரேட்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மாற்றம்.. முழு பின்னணி

டெல்லி: ஐபிஎல் 2026 சீசனின் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். இதற்காக அவர் தனது சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொண்டுள்ளார். அவருக்கு மாற்றாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்பு லக்னோ அணியால் 27 கோடி ரூபாய் என்ற சாதனைத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார் ரிஷப் பண்ட். ஆனால், அங்கு அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி பெரிய அளவில் எடுபடவில்லை. 2025 மற்றும் 2026 ஐபிஎல் தொடர்களில் அவர் முறையே 269 மற்றும் 312 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். கேப்டனாகவும் அதிக வெற்றிகளை பெறவில்லை. இதனையடுத்து, தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குத் திரும்புவதற்காக தனது சம்பளத்தை 15 கோடி ரூபாயாகக் குறைத்துக் கொண்டுள்ளார்.

முன்னதாக, 2016 முதல் 2024 வரை டெல்லி அணியின் முக்கிய வீரராகவும், கேப்டனாகவும் இருந்த ரிஷப் பண்ட், அந்த அணிக்காக 111 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெல்லி அணியின் வரலாற்றிலேயே அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. மேலும், 2021 முதல் 2024 வரை 43 போட்டிகளில் டெல்லி அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். தற்போது மீண்டும் தனது சொந்த அணிக்குத் திரும்பியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மெகா பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெல்லி அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2022 இல் டெல்லி அணியில் இணைந்த குல்தீப், 65 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது அவர் 13.50 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் லக்னோ அணியில் இணைய உள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான இந்த வீரர்களின் மாற்று ஒப்பந்தத்தை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.