ரஷ்ய தாக்குதலில் இறந்த தமிழக மாலுமியின் உடலை கொண்டு வர அரசுக்கு கோரிக்கை
சென்னை: 'சரக்கு கப்பல் மீது, ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்த, தமிழக மாலுமியின் உடலை கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்திய கப்பல் மாலுமிகள் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, சங்கத்தின் துணைத் தலைவர் நரேந்திர ராவ் கூறியதாவது: உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட, எம்.வி. கோல்டன் லியோ என்ற கப்பல் மீது, ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், மொத்தம் ஒன்பது பேர் இறந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர், இந்தியாவை சேர்ந்த கப்பல் மாலுமிகள். இதில், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும், தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்தவரை அடையாளம் கண்டு, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க தொடங்கி உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவரை இன்னும் அடையாளம் காணவில்லை. இறந்த மாலுமியின் உடலை, தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட கப்பல் மாலுமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.