📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 26, 2026 08:00 PM

ரூ.5 கோடி மதிப்பில் தமிழ்நாடு பொதுச் சேவைகளுக்கான செயலி

ரூ.5 கோடி மதிப்பில் தமிழ்நாடு பொதுச் சேவைகளுக்கான செயலி

சென்னை: அரசு சேவைகளை எளிதாகப் பெற ரூ.5 கோடி மதிப்பில் ‘வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி’ உருவாக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல், மின்னிலக்க சேவைகள் துறை அமைச்சர் குமார் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாகன உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அரசு சேவைகளைப் பொதுமக்கள் தங்களின் கைப்பேசி வாயிலாக நேரடி பயன்பாட்டிற்குப் பெற அந்தச் செயலி உதவும்.

மேலும், தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘தமிழ் இணைய மொழி ஆய்வகம்’ அமைக்கப்படும்.

சுகாதாரம், வேளாண்மைத் துறைகளின் சேவைகளைத் திறம்பட செயல்படுத்தச் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்தும் நோக்கில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 500 பண்பாட்டுத் தளங்களை ரூ.60 லட்சத்தில் ஆவணப்படுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொழில்முனைவோருக்கான இலவச செயற்கை நுண்ணறிவுச் சேவைகள் திட்டம் ரூ.10 கோடியிலும், பொதுமக்கள் அரசின் சேவைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க ‘வெற்றித் தமிழ்நாடு இணையத்தளம்’ ரூ.1 கோடியிலும் செயல்படுத்தப்படும்.

தொழில்நுட்ப மையத்தின் (iTNT Hub) மூலமாக ரூ.50 கோடி தொடக்க நிதியுடன் ‘வெற்றித் தமிழகம் ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தாக்க நிதியம்’ ஏற்படுத்தப்படும். இதில் 25 விழுக்காடு ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனைவோருக்கு ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) மூலமாக ரூ.20 கோடி மதிப்பில் ‘வெற்றித் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள்’ நிறுவப்பட்டு, ஆய்வு, திறன் மேம்பாடு, புத்தொழில் நிறுவன வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.