ரூ.50,000 அபராதம் விதிக்க நேரிடும் என்று முதல்வர் விஜய் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
ரூ.50,000 அபராதம் விதிக்க நேரிடும் என்று முதல்வர் விஜய் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனி தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த தேர்தல் வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தேர்தல் வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டியுள்ளது. கடந்த முறையே வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று கூறியதை நினைவூட்டினார். இதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி , ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிகுள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.