📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 18, 2026 08:31 AM

Sandakari Review: சண்டக்காரி விமர்சனம்.. விமல், ஸ்ரேயா நடித்த படம் நல்லா இருக்கா? இல்லையா?

Sandakari Review: சண்டக்காரி விமர்சனம்.. விமல், ஸ்ரேயா நடித்த படம் நல்லா இருக்கா? இல்லையா?

சென்னை: இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா, பிரபு, கே.ஆர். விஜயா, சத்யன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கப்பட்டு இன்று திரையரங்குகளில் ஒரு வழியாக வெளியாகி உள்ள படம் தான் சண்டக்காரி.

களவாணி, வாகை சூடவா என விமல் பீக்கில் இருந்தபோது உருவாக்கப்பட்ட படம் சில பல காரணங்களால் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்த நிலையில், விஷாலின் மத கஜ ராஜா போல லேட் ரிலீஸ் ஆகியுள்ளது. சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆக இன்னும் இது போல எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தான் தெரியவில்லை.

2011ம் ஆண்டு ஜீவாவுடன் ரெளத்திரம் படத்தில் நடித்த ஸ்ரேயா அதன் பின்னர் ஹீரோயினாக நடித்துள்ள தமிழ் படமான சண்டக்காரி படம் நல்லா இருக்கா? இல்லையா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

சண்டக்காரி கதை: லண்டனில் ஒரு பெரிய கம்பெனியில் சிஎம்ஓவாக வேலை பார்க்கும் சரியான ராங்கியான ஸ்ரேயாவிடம் பெரிய லட்சியங்களை வைத்து இருந்தாலும், அசிஸ்டண்ட் வேலைக்கு வந்து சேர்கிறார் நம்ம ஹீரோ விமல். 50 பேருக்கு மேல் அந்த வேலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் தெறித்து ஓடிய நிலையில், விமல் அந்த வேலையில் தாக்கு பிடித்தாரா? அதை தாண்டி ஸ்ரேயாவின் மனதில் இடம் பிடித்தாரா? ஸ்ரேயா போடும் சுயநல டிராமா மற்றும் சொந்த ஊருக்கு அவரை அழைத்து வந்து விமல் ஆடும் டபுள் கேம் கடைசியில் எங்கே போய் முடிகிறது என்பது தான் இந்த சண்டக்காரி படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: களவாணி, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் பார்த்து ரசித்த விமலை மீண்டும் திரையில் பார்ப்பது சற்றே மகிழ்ச்சியை தருகிறது. நடிகை ஸ்ரேயா ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் தனக்கே உரிய பாணியில் மாயா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

படத்தின் ஒரே ஆறுதலும் ஸ்ரேயாவின் நடிப்பு தான் என்றே சொல்லலாம். லண்டன் பப்பில் வரும் ஒரு பாடல் மற்றும் கிராமத்தில் விமலுடன் குடித்து விட்டு லுங்கி டான்ஸ் போடும் ஒரு பாடல் என ரசிக்க வைக்கிறது. விமலின் அப்பாவாக பிரபு, பாட்டியாக கே.ஆர். விஜயா, அம்மாவாக உமா பத்மநாபன் வில்லனாக மகதீரா வில்லன் தேவ் கில் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு படத்திற்கு கை கொடுத்துள்ளது.

ஆரம்பத்தில் அப்பாவியான அசிஸ்டன்ட்டாக வேலை பார்க்கும் விமலும் சண்டக்காரியாக இருக்கும் ஸ்ரேயாவும் இடைவேளைக்குப் பிறகு அப்படியே சேஞ்ச் ஓவர் ஆவது எல்லாம் சுத்தமாக எடுபடவில்லை. எந்தவொரு கேரக்டரையும் ஸ்ட்ராங்காக எழுதவோ காட்சிப்படுத்தவோ இல்லை.

ஆனால், சமீபத்தில் வந்த நயன்தாரா, கவின் நடித்த ஹாய் படத்தின் கதை போலவே இந்த படத்தின் கதை உள்ளது ரசிகர்களை சற்றே வியப்பில் ஆழ்த்தும். முன்னதாக இந்த படம் வெளியாகி இருந்தால், ஹாய் படம் வந்திருக்குமா என்பதே டவுட்டு தான்.

பிளஸ்: நடிகர் விமலின் யதார்த்தமான ஜாலியான நடிப்பை மீண்டும் திரையில் பார்க்க முடிகிறது. நடிகை ஸ்ரேயா ஹீரோயினாக ஒட்டுமொத்த படத்தையும் மெயின் லீடாக தாங்கிப் பிடித்து காப்பாற்ற போராடுவது படத்திற்கு பலம். அம்ரிஷ் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் 10 வருடங்களுக்கு முன்பு வெளியான குத்து பாடல்களை மீண்டும் நினைவுப் படுத்துகிறது.

மைனஸ்: ஆனால், அந்த தக்காளி பாடலின் வரிகள் எல்லாம் ரொம்பவே மோசம். டபுள் மீனிங் வசனங்கள், மோசமான பழைய ஸ்டைல் காமெடிகள், வீக்கான வில்லன், லண்டனுக்குப் போய் பிரம்மாண்டமாக எடுக்கிறோம் என முதல் பாதியில் செல்லப்பட்ட புரொடக்‌ஷன் செலவுகள் உள்ளிட்டவை படத்திற்கு எந்த வகையிலும் கை கொடுக்கவே இல்லை. நீங்க ஸ்ரேயா மற்றும் விமல் ரசிகராக இருந்தால் ஒரு முறை ட்ரை பண்ணலாம்.