Sardar 2 Blue Sattai Maran Review
சென்னை: பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா என பலர் நடித்திருக்கும் திரைப்படம் சர்தார் 2. இதன் முதல் பாகம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாய் வசூலித்தது. எனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய ஆவல் இருந்தது. நேற்று படம் ரிலீஸான சூழலில்; பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
கார்த்தி - பிஎஸ் மித்ரன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான சர்தார் படம் மெகா ஹிட்டடித்தது. உலகம் முழுவதும் மொத்தம் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. அந்த உற்சாகத்தோடு இரண்டாவது பாதியை உருவாக்கினார் இயக்குநர். இதில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இது அவருக்கு நூறாவது படமாகும்.
சர்தார் 2 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: படமானது நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " இந்தப் படத்தின் கதையை பற்றி பார்த்தோம் என்றால், டோக்கு என்ற பயோலாஜிக்கல் ஆயுதம் ஒன்று இருக்கும். அதை மனிதர்கள் மீது வில்லன் ஏவி பெரிய நாச வேலையை செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார். அதை தடுப்பதற்கு சர்தார் இறங்குகிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.
சூர்யாதான் ஆறுதல்: படம் மொத்தம் மூன்று மணி நேரம் போகிறது. கொஞ்சம் கதையை வைத்துக்கொண்டு அதை மூன்று மணி நேரம் இழுத்து வைத்திருக்கிறார்கள். லாஜிக், சென்ட்டிமென்ட், எமோஷன் என எதுவுமே இல்லை. முதல் பாதியாவது பரவாயில்லை. இரண்டாவது பாதியெல்லாம் ரொம்பவே இழுத்துவிட்டார்கள். படத்திலேயே ஆறுதலான விஷயம் என்னவென்றால் எஸ்.ஜே.சூர்யா கேரக்டர்தான். அவர் முடிந்த அளவுக்கு படத்தை காப்பாற்றியிருந்தார்.
போகப்போக அதுவும் சலிப்புதான்: அதுவுமேகூட ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. ஆனால் போகப்போக அதுவும் சலிக்க தொடங்கிவிட்டது. அந்த கேரக்டரும் வலுவாக எழுதப்படாததால் படம் சப்பென்று ஆகிவிட்டது. பிராய்லர் கோழியெல்லாம் சாப்பிடுகிறீர்கள் அதனால்தான் கொல்கிறேன் என்று வில்லன் சொல்கிறார்.
உங்கள் இஷ்டம்: பிராய்லர் கோழியை சாப்பிடாமல்தான் உயிர் வாழ வேண்டுமென்றால் நாங்களே தற்கொலை செய்துகொள்கிறோம். அல்லது நீ கொன்றுவிடு என்று சொன்ன பிறகு; அவர் முக்கால் மணி நேரம் நம்மை கொன்றுவிட்டார். படம் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்கான படம்தான். பார்ட் ஒன்றே சுமாரான படம்தான். இப்போது அதைவிட சுமாரான படத்தை எடுத்து வைத்திருக்கிறார். இதிலாவது முதல் பாதி பரவாயில்லை. இரண்டாவ்து பாதியெல்லாம் எப்போடா படம் முடியும் என்று தோன்றிவிட்டது. அதற்கு பிறகு உங்கள் இஷ்டம்" என்றார்.