📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 26, 2026 02:04 AM

டாப்ஸ்லிப் அருகே வனப்பகுதிக்குள் மாயமான மூன்று சிறுவர்கள்

டாப்ஸ்லிப் அருகே வனப்பகுதிக்குள் மாயமான மூன்று சிறுவர்கள்

டாப்ஸ்லிப் அருகே வனப்பகுதிக்குள் மாயமான மூன்று சிறுவர்கள் - கால் தடத்தை வைத்து தேடும் வனத்துறை

வனப்பகுதியில் மாயமான மாணவர்களின் கால் தடம் பதிந்துள்ளதால் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Published : August 25, 2026 at 8:22 PM IST

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் பகுதியில் 3 பள்ளி மாணவர்கள் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் உண்டு உறைவிட அரசுப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் எருமப்பாறை, கூமாட்டி, கோழிகமுத்தி, டாப்ஸ்லிப் காலனி உட்பட மலைவாழ் மக்கள் கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 7 மணி அளவில், கூமாட்டி பகுதியை சேர்ந்த தினகரன், சசி, நாகருத் பகுதி சேர்ந்த சுதீஷ் உட்பட 3 பேர் பள்ளிக்குப் பின்புறம் குளிக்க சென்றுள்ளனர். வெகுநேரம் கடந்தும் மாணவர்கள் பள்ளிக்கு வராததால், ஆசிரியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் மூன்று சிறுவர்களை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், சிறுவர்கள் இங்கு வந்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது.

இருப்பினும், மாணவர்களின் கால் தடம் தெரிந்ததால், அவர்கள் வனப்பகுதியை விட்டு வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை என கருதினர். மேலும், வனப்பகுதியில் தற்போது காட்டு யானைகள் அதிகளவில் கூட்டமாக சுற்றி வருவதால், மாணவர்கள் உள்ளே அதிக தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிறுவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஆனைமலை காவல் துறையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஏற்கெனவே வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது போலீசாரும் இறங்கியுள்ளனர்.

மேலும், சிறுவர்களின் உறவினர்கள், சக பள்ளி மாணவர்களிடமும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மறுபக்கம், சிறுவர்களின் உறவினர்களும் வனப்பகுதிக்குள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று பள்ளி மாணவர்கள் மாயமான சம்பவம் மலைவாழ் மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது