டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- சாலையில் இறங்கிய மதுப்பிரியர்கள்
எம்ஆர்பி விலைக்குத்தான் மதுபானங்களை விற்பனை செய்கிறோம் என மதுப்பிரியர்களிடம் எடுத்துரைத்து கோவில்பட்டி டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
Published : September 3, 2026 at 10:38 PM IST
சென்னை/காஞ்சிபுரம்/தூத்துக்குடி: டாஸ்மாக் ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், காலிபாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கும் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூபாய் 30,000 வரை ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், இனி டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூபாய் 10 கூடுதலாக வாங்கினாலும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய 600- க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகத்தைக் கண்டித்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட டாஸ்மாக் கடைகளை அடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து டாஸ்மாக் கூட்டமைப்புக் குழு தரப்பினர் கூறுகையில், "சென்னையில் காலிபாட்டில் வாங்குவது கிடையாது; ஆனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மண்டலத்தில் மட்டும் கட்டாயப்படுத்தி காலிபாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்க சொல்கிறார்கள். அதேபோல், பத்து ரூபாய் சில்லரை பிரச்சனை இருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு பத்து ரூபாய் சில்லரை வாங்குவதற்கு கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது.
அதனால் காலிபாட்டிலைத் திரும்பப் பெற ரூ.10 வசூலிப்பதைத் திரும்பப் பெற வேண்டும். தினசரி ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.10 சில்லரையை டாஸ்மாக் நிர்வாகம் வழங்க வேண்டும். இதைச் செய்ய செய்தால் எம்ஆர்பி விலையில் மதுபானம் விற்பனை செய்யத் தயார்" எனத் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்டப் பகுதிகளில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள்
மறைமலைநகர் பகுதியில் செயல்பட்டு வரும் 4305 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்ததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மதுப்பிரியர்கள் கூறுகையில், "டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வாங்குகின்றனர். மாதச் சம்பளம் இல்லாமல் ஒரு நாளைக்கு மட்டும் சூப்பர்வைசர் மற்றும் விற்பனையாளர்கள் ரூ.5,000 வரை ஈட்டுகின்றனர். அப்படியிருந்தும் முன்னறிவிப்பின்றி எப்படி மூடலாம்? யார் அனுமதி கொடுத்தது?" என கேள்வி எழுப்பினர்.
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. குறிப்பாக, குன்றத்தூர், திருமுடிவாக்கம், கரைமா நகர் உள்ளிட்டப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் மதுப்பிரியர்கள் கடும் அவதியடைந்தனர்.
பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் மேலாளருடன் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை டாஸ்மாக் கடையைத் தற்காலிகமாக மூடி வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத்தினர் கூறுகையில், "அக்டோபர் மாதம் காலிபாட்டில் பெறுவதற்கான டெண்டர் விடப்படும் வரை இந்த நடைமுறைதான் இருக்கும்; அதையும் மீறி டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடினால் நடவடிக்கை பாயும்; பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளைத் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் எச்சரித்தும், டாஸ்மாக் கடைகளை ஊழியர்கள் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கைப் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் தெற்கு மண்டல டாஸ்மாக் அலுவலகம் முன்பு 100- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலிபாட்டில்களை வாங்கும் பணியை தங்களிடம் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கு தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் லெட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் அனைத்து மதுபானங்களும் எம்ஆர்பி விலை மற்றும் BUY BACK (பாட்டில் திரும்ப பெறுதல்) விலை ரூ.10 மட்டும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. மதுப்பிரியர்கள் புகார்களைத் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் அப் எண்ணுடன் குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் அங்கு பணியாற்றக் கூடிய ஊழியர்கள் மதுபானம் வாங்க வருபவர்களிடம் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கவில்லை, இனி பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை, எம்ஆர்பி விலைக்கே விற்பனை செய்கிறோம் என்று கூறுவதுடன், சிலர் கூடுதலாக பணம் கொடுத்தாலும் அதை திருப்பிக் கொடுத்து விடுகின்றனர்.
டாஸ்மாக் விற்பனையாளர் கற்பகராஜ் கூறுகையில், "அரசுத் தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குடிநீர், தூய்மைப் பணிகளுக்கு எங்களது கையில் இருந்து பணம் கொடுத்துக் கொண்டிருந்தோம். தற்போது துாய்மைப் பணியை மேற்கொள்ள மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளது வரவேற்கக்கூடியது.
தற்போது கூடுதல் விலைக்கு நாங்கள் மதுபானங்களை விற்கவில்லை. தற்போது எம்ஆர்பி விலைக்குத்தான் விற்கிறோம். அதை சொல்லி சொல்லி விற்கிறோம். மதுப்பிரியர்கள் கூடுதலாகப் பணம் கொடுத்தாலும், இதுவரை நாங்கள் பிச்சை எடுத்ததுபோதும், எங்களை அரசு பிச்சை எடுக்கவிடவில்லை என்று கூடுதல் பணம் வேண்டாம் என்று கூறி வருகிறோம்.
எந்தவித பயமும் இல்லை; நிம்மதியாக உறங்கினேன்
தற்போது எவ்வித பயமும் இல்லை, நிம்மதியாக உறங்கினேன்; கூடுதல் பணம் வாங்கியபோது எங்களையும், எங்களது குடும்பத்தையும் திட்டுவார்கள். தற்போது பிச்சை எடுக்க வேண்டிய நிலையைத் தடுத்துவிட்டனர். முதலமைச்சருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கும் வீடுகள் கட்டுவதற்கு லோன் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.
மதுப்பிரியர் கண்ணன் கூறுகையில், "இதற்கு முன்பு பாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாகப் பணம் கேட்பார்கள், தற்போது கேட்பதில்லை; மேலும் பாட்டிலைத் திருப்பிக் கொடுத்ததும், அதற்கான பணத்தையும், சரியாக கொடுத்துவிடுவதாகவும், முன்பு கூடுதலாகப் பணம் கொடுக்கும்போது கொஞ்சம் மன வருத்தம் இருந்தது. தற்போது அது இல்லை" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.