தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்துவந்த நிலையில், சென்னையில் இன்று (செப்.3) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
இந்தச் சூழலில், அண்மையில் வெளியிட்ட காணொலியில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இந்தியர்களின் கடின உழைப்பால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் சுதேசி கொள்கைகளை இந்தியர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். தேவையில்லாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது. வெளிநாடுகளில் திருமணங்களை நடத்தக் கூடாது. தேவையில்லாமல் தங்கத்தை வாங்கக் கூடாது.” எனப் பேசியிருந்தார்.
“பிரதமர் மோடி கூறும் ‘தற்சார்பு இந்தியா’ என்பது வெறும் அரசியல் கோஷம் அல்ல; அது நாட்டின் அந்நியச் செலவாணியைப் பாதுகாக்கும் மந்திரச் சொல். நாம் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும் நமது ரூபாயின் மதிப்பைக் குறைத்து, டாலரின் கரங்களை வலுப்படுத்துகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே ‘தேவையின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்” என்று நிபுணர்களும் கூறியிருந்தனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை குறைந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரு.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,240-க்கும், பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,13,920-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.