📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 03, 2026 05:04 PM

யாரும் அவசரப்படக்கூடாது. அவசரப்பட்டு ராஜினாமா செய்வது தவறான முன்னுதாரணம்

யாரும் அவசரப்படக்கூடாது. அவசரப்பட்டு ராஜினாமா செய்வது தவறான முன்னுதாரணம்

யாரும் அவசரப்படக்கூடாது. அவசரப்பட்டு ராஜினாமா செய்வது தவறான முன்னுதாரணம் - பிரேமலதா..!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கோமாதாவை தெய்வமாக மதிக்கும் நிலையில், மாட்டின் பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனப் பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்படும் நிலை இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கறவை மாடு வழங்கி விவசாயத்தையும், பால்வள உற்பத்தியையும் ஊக்குவிக்கும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலையான ரூ.44-ஐ, ரூ.55 ஆக உயர்த்தினால் விவசாயிகள் பெரிதும் வரவேற்பார்கள்" என்றார்.

மீனவர் நலன் குறித்து பேசிய பிரேமலதா, "கச்சத்தீவை மீட்டெடுப்பதே தமிழக மீனவர்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவியாக இருக்கும். மழை மற்றும் புயல் காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால், அவர்களுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை அதிகரிக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.

கால்நடை மானிய கோரிக்கை தொடர்பாக பேசிய அவர், "கால்நடை வளர்ப்பவர்களுக்கு மாடுகளுக்கான தீவன உற்பத்தி மற்றும் பராமரிப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருத்துவர்கள் இல்லாமல் செயல்படும் கால்நடை மருத்துவமனைகளில் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

இசக்கி சுப்பையா ராஜினாமா குறித்த கேள்விக்கு, "அவசரப்பட்டு ராஜினாமா செய்தது இசக்கி சுப்பையாதான். யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே என்ற வார்த்தையில் பல கோடி அர்த்தங்கள் இருக்கின்றன. எனவே, யாரும் அவசரப்படக்கூடாது. அவசரப்பட்டு ராஜினாமா செய்வது தவறான முன்னுதாரணம். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

மேட்டூர் அணையில் நீர் திறப்பு தொடர்பாக பேசிய பிரேமலதா, "மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் தண்ணீர் திறந்தது காலதாமதமான நடவடிக்கை. குறுவை சாகுபடி ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் விவசாய நிலங்களை சென்றடையவே 10 நாட்களுக்கு மேல் ஆகும். கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டி காணப்படுகின்றன. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல விவசாயிகளின் நிலைமை உள்ளது" எனத் தெரிவித்தார்.