📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 07, 2026 08:34 PM

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலித்தால் வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலித்தால் வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால், சம்பந்தப்பட்ட போலீஸிடம் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், அந்தப் புகார் மீது உடனடியாக காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதுபோல, 2022-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று கூட மது வாங்கியபோது ரசீது வழங்கப்படவில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூப்பர் மார்க்கெட்களில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது கொடுக்கும் நிலையில், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது எனவும், கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், நுகர்வோர் கூடுதல் தொகையை கொடுக்க கூடாது எனவும், அவர்கள் கொடுப்பதால் தான் கடை பணியாளர்கள் கேட்கின்றனர் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, அரசு சுற்றறிக்கையை பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸிடம் புகார் அளிக்க வேண்டும் என நுகர்வோருக்கு உத்தரவிட்டார்.

அந்தப் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களை பணியமர்த்த, உள்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.