📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 07, 2026 01:33 PM

டெல்டா மாவட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் முன்பு 'திடீர்' சாலை மறியல்

டெல்டா மாவட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் முன்பு 'திடீர்' சாலை மறியல்

டெல்டா மாவட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் முன்பு 'திடீர்' சாலை மறியல்

பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published : August 7, 2026 at 12:54 PM IST

சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் முன்பு தவெக அரசிற்கு எதிராக முழக்கமிட்டு கோணி பைகளை அணிந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்தது. அந்த பதவியேற்பு விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் நிதிநிலைமையை ஆராய்ந்து, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் விரைவாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி த.வெ.க. அரசின் முதல் பொது நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையும் நேற்று (ஆகஸ்ட் 6) தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் த.வெ.க. தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி பற்றிய எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், த.வெ.க. அரசு விவசாயப் பயிர்க் கடன் தள்ளுபடியை இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சென்னை தலைமைச் செயலகம் முன்பு கோணி பைகளை அணிந்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பேசிய டெல்டா மாவட்ட விவசாயிகள், த.வெ.க. அரசு நேற்றை தினம் தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இல்லாமல், ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

மேலும், பயிர்க் கடன் தள்ளுபடியை உடனடியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் குரலைக் கேளுங்கள் மற்றும் விவசாயிகள் வளர்ந்தால் தான் தமிழ்நாடு வளரும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி த.வெ.க. அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி டெல்டா மாவட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்து காவல் வாகனங்களில் ஏற்றி, அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.