📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema November 27, 2026 04:01 PM

திமுக ஆட்சியில் திக்கு திசையெங்கும் ஊழல் என முதல்வர் விஜய் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் திக்கு திசையெங்கும் ஊழல் என முதல்வர் விஜய் குற்றச்சாட்டு

சென்னை: ''மக்கள் எல்லாரும் ஊழலை பழகி விட்டனர் என, அதை கடந்து போய்விட முடியாது. கல்வித் துறையில் புத்தகங்கள் வாங்கியதில் நடந்த ஊழலை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?'' என, கல்வி விருது வழங்கும்

விழாவில் முதல்வர் விஜய் ஆவேசமாக பேசினார். அதே நேரத்தில், தி.மு.க., ஆட்சியில் திக்கு திசையெங்கும் ஊழல் நடந்திருப்பதாக, பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும் குற்றஞ்சாட்டினார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியருக்கு, த.வெ.க., சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா, சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது.

இதில், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை, பெரம்பலுார், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, முதல்வரும், த.வெ.க., தலைவருமான விஜய் விருதுகள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: நான் மாணவர்களிடம் ஒன்றை சொல்லியாக வேண்டும். அது, மாணவர்கள் தொடர்புடைய விவகாரம். மாணவர்கள் வாழ்க்கையில் எப்படி உஷாராக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக, இந்த நிகழ்ச்சியில் அதைச் சொல்கிறேன். ஊழல் என்பது பழைய விஷயம் தான். மக்கள் எல்லாரும் பழகி போய் விட்டனர் என, அதை கடந்து போய்விட முடியாது. ஊழல் என்ற நோயை சரி செய்ய வேண்டும்; முடியுமா என்று கேட்கின்றனர். குறைந்தபட்சம் அதை குறைக்கவாவது செய்யலாம்; அதற்கான நடவடிக்கை எடுக்கலாம்.

அப்படி எடுத்த நடவடிக்கை காரணமாக, சிலரின் அடித்தளம் ஆடிப்போய் கிடக்கிறது. சமீபத்தில் நடந்த ஊழலை பற்றித்தான் சொல்கிறேன். மற்ற துறைகளில் ஊழல் நடந்தால், சட்ட நடவடிக்கை எடுப்போம். கல்வித் துறையில் ஊழல் நடந்திருப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?

மற்ற துறைகளில் ஊழல் நடந்தால் பரவாயில்லையா என்று கேட்பர். எல்லா துறைகளிலும் தவறு நடந்ததால், அது தவறு தான். கல்வித்துறை தான் அனைத்திற்கும் அடித்தளம். மாணவர்களுக்கு முக்கியமானது; இளைய தலைமுறையினருக்கு முக்கியமானது.

பள்ளி பாதுகாப்பில் எல்லாம் விளையாடி இருக்கின்றனர். கும்பகோணம் பள்ளி விவகாரத்தை இப்போது நினைத்தாலும் பதறுகிறது. அதை இப்போதும் தொடர்ந்து இருக்கின்றனர். என் மேஜையில் மூன்று பைல்கள் இருக்கின்றன என்று தான் சொன்னேன். அதற்கு ஒருத்தர், 'திறந்து தான் பாருங்களேன்' என்றார்.

அதிகாரிகளை திறந்து பார்க்கச் சொன்னேன். நுாலகங்களில் எல்லாம் ஏ.ஐ., தொழில்நுட்பம் வந்து விட்டது என்று எதிர்பார்ப்புடன் இருந்தால், அதிலும் ஊழல் செய்துள்ளனர். ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்து, ஆரம்ப காலத்திலேயே இப்படி ஒரு ஊழல் நடந்துள்ளது. இவர்களை எங்கு கொண்டு போய் வைப்பது; என்ன செய்வது என தெரியவில்லை.

கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கடலுார் நகரங்களில் அறிவுலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. கோவை அறிவுலகத்தில் முறைகேடு நடந்துள்ளது; மற்ற நுாலகங்களில் என்னென்ன நடந்துள்ளது என்று தெரியவில்லை; ஒவ்வொன்றாக வெளியில் வரும்.

இது, அறிவுலகமா அல்லது ஊழல் உலகமா என்று எனக்கு தெரியவில்லை. நான் சும்மா சொல்லவில்லை. நான் அரசியலுக்கு வந்ததே, ஒவ்வொரு குடும்பத்திற்காகவும், அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் நலனுக்காகவும் தான். இளைய தலைமுறையினரின் வாழ்க்கை பாதிக்கும் வகையில் நடந்தால், எப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்? நான் எப்போதும் நல்ல விஷயங்களை மட்டுமே மாணவர்களுக்கு சொல்லி, நல்வழியில் நடத்திக் கொண்டு போவேன். இதற்கு மேல் அதைப்பற்றி பேசி போர் அடிக்க விரும்பவில்லை. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

தி.மு.க., ஆட்சியில் திக்கு திசையெங்கும் ஊழல் நடந்துள்ளதாக, பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றஞ்சாட்டினார். விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, அமைச்சர் அளித்த பேட்டி: முதல்வர் விஜய் கூறியதை போல, எங்கு பார்த்தாலும் திக்கெட்டும் திசையெட்டும் ஊழல் என, கடந்த கால ஆட்சி, ஊழல் மலிந்த ஆட்சியாக இருந்தது. அந்த ஊழல் ஆட்சிக்கு, பள்ளி கல்வித் துறையில் நடந்த ஊழலே சாட்சி. கோவை ஈ.வெ.ரா., நுாலகத்தில் நடந்த ஊழலே சாட்சி.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, தனியாக ஒரு அலுவலகம் அமைத்து, ஊழல் செய்தனர். இந்த வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மகேஷ், சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார். இன்னொரு கும்பகோணம் தீ விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை, தி.மு.க., ஆட்சி ஏற்படுத்தி இருந்தது.

பள்ளி கல்வித் துறையை ஊழல் துறையாக தி.மு.க., மாற்றி விட்டது. ஈ.வெ.ரா., நுாலகம் விவகாரத்தில், வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடக்கிறது. சாமர்த்தியமாக இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது. அதிகாரிகள் மட்டுமல்லாது, அரசியல்வாதிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கும். இந்த வழக்கின் விசாரணை, ஏதோ ஒரு கரை வேட்டியிடம் தான் சென்று நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.