திருச்சூரில் லாரி மீது கார் மோதியது; தமிழக மாணவர்கள் 8 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் எட்டு பேர் உயிரிழந்தனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த தமிழகத்தில் பதிவு செய்ய கார் (TN 59 DW 8299) லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் முற்றிலுமாகச் சிதைந்து, உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. உயிரிழந்த எட்டு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.எம் பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.