திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவில் சிறப்பு தொழுகை
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவில் சிறப்பு தொழுகை - சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தீவிர கண்காணிப்பு
திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
Published : November 28, 2026 at 12:34 PM IST
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்வதற்காக, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் வருகை தந்துள்ளனர்.
பெண்கள், ஆண்கள் மற்றும் இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்பதற்காக அங்கு கூடியுள்ளனர். இதையடுத்து, காலை 6:15 மணிக்கு மேல் காவல் துறையினர் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து, ஒவ்வொருவரின் விவரங்களையும் சேகரித்தனர்.
சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை - இஸ்லாமியர்களுக்கு அனுமதி #Thiruparankundram | #deepamissue | #dargah | #policesecurity | #ETVBharatTamilNadu https://t.co/UqMep3WAM7
தொடர்ந்து, தீவிர பரிசோதனைக்கு பிறகே அவர்கள் மலை மேல் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் சிறப்புத் தொழுகைக்காக மேலே செல்கின்றனர் என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மலை ஏறுவோரின் உடைமைகள் ஒவ்வொன்றும் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், மலை முழுவதும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (CRPF) வீரர்கள் தங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில், மலை முழுவதையும் அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த கார்த்திகை தீபத்திருநாள் அன்று (நவம்பர் 24), திருப்பரங்குன்றத்தில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றலாம் என்றும், இந்த முறை மட்டுமே இது பொருந்தும் எனவும் நவம்பர் 20 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கோயில் அறங்காவலர் குழு கல் தூணில் தீபம் ஏற்றாமல், எப்போதும் பின்பற்றும் நடைமுறையை செயல்படுத்தியது. அதன்படி, உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கடும் விமர்சனங்களை பெற்ற இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில் அறங்காவலர் குழுவை கலைத்து உத்தரவிட்டது.
மேலும், இன்றைய தினம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், பக்தர்கள் மலையேற தடைவிதிக்கக் கூடாது என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. கல் தூணில் தீபமேற்றும் நடைமுறைகளை கவனிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி திருப்பரங்குன்றம் மலை உச்சியில், சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவின் அருகே இருக்கும் கல் தூணில் இன்று தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நேரத்தில் இஸ்லாமியர்களும் தர்ஹாவில் தொழுகைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.