உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது, தமிழ்நாடு செய்திகள்
திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் சனிக்கிழமை மாலை (நவம்பர் 28) உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப தீபம் ஏற்றப்பட்டது.
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று அப்போது பக்தர்கள் முழக்கமிட்டனர்.
உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டபடி கடந்த நவம்பர் 24ஆம் தேதி அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை.
இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை (நவம்பர் 28) மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் மலையின் பாதுகாப்புப் பணியை மத்திய ரிசர்வ் காவல்துறையிடம் ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டபோது உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கோயில் பட்டர்கள், நீதிபதிகள் இணைந்து தீபத்தை ஏற்றிவைத்தனர். மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதை மலையடிவாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர்.
முன்னதாக, நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை காலை 11.24 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகையளித்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையில் கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.
பின்பு திருவாட்சி மண்டபத்தின் முன்பு மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குரிய மூன்று மண் சட்டிகள், முப்பது கிலோ நெய், ஐம்பது மீட்டர் காடா துணி, ஐந்து கிலோ கற்பூரம் அடங்கிய பொருள்களுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
இதன் பிறகு சிறப்புப் பூஜை செய்யப்பட்ட மண்சட்டிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் பாதுகாப்பாகத் தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக, அங்கு சாரங்கள் அமைக்கப்பட்டன. அதன்மீது பச்சைக் களிமண் பூசப்பட்டு, இந்த மண்சட்டிகளை நிலைநிறுத்தி, நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றுவதற்கு தயார் செய்யப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தீபம் ஏற்றும் இடத்தில் 50 பேர் மட்டுமே இருக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதுகுறித்து, விளக்கமளித்த மதுரை மாவட்ட நிர்வாகம், “பொதுமக்களின் பாதுகாப்பு, மலைப் பகுதியின் புனிதம், சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர பொதுமக்கள், பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை," என்று தெரிவித்தது.