📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 30, 2026 08:03 AM

திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து சீனா முன்னெச்சரிக்கை தகவல் வழங்கவில்லை: நேபாள முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து சீனா முன்னெச்சரிக்கை தகவல் வழங்கவில்லை: நேபாள முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

காத்மாண்டு: நேபாளத்தின் முன்னாள் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மாதவ் பிரசாத் சவுலாகைன் கூறியதாவது:

கடந்த புதன்கிழமை பெரும் வெள்ளப்பெருக்கு நேபாள-திபெத் எல்லையைத் தாக்கியது. அதற்கு முன்பாக, சீனத் தரப்பில் இருந்து நேபாளத்துக்கு உரிய நேரத்தில் எந்த முன்னெச்சரிக்கை தகவலும் கிடைக்கவில்லை. இதுவே உயிரிழப்புகள் அதிகரித்ததற்கு காரணம் ஆகும்.

2025-ல் ஏற்பட்ட சிறிய அளவிலான பனிப்பாறை சம்பவத்துக்குப் பின்னர், முன்னெச்சரிக்கை தகவல்களைப் பகிர்வதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த நடைமுறை இம்முறை பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பேரழிவு நேபாளப் பகுதியில் தொடங்கியதாக சீனா கூறுவது தவறான தகவல். இந்தச் சம்பவம் திபெத் பகுதியில் இருந்துதான் தொடங்கியது.

இந்தப் பேரழிவு, பேரிடர் மேலாண்மை மற்றும் திட்டமிடலில் உள்ள மிகப்பெரிய குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. நேபாளத்தின் முன்னெச்சரிக்கை அமைப்புகளும், நீர்மின் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளும் பனிப்பாறை ஏரிகளை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தன.

ஆனால், இம்முறை பனிப்பாறைகள் சரிந்து அதிலிருந்து உருவாகும் ஆற்றின் நீரோட்ட அமைப்பும் முற்றிலும் சிதைந்துள்ளது. நேபாளம், சீனா மற்றும் இந்தியா இடையே செயல்பாட்டில் இருக்கும் முன்னெச்சரிக்கை தகவல் பரிமாற்ற அமைப்பு இல்லாதது, நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான எச்சரிக்கை. தகவல்களைப் பகிராமல் இருப்பது மனிதநேயத்துக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.