📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 30, 2026 09:04 AM

பாலர்பள்ளி ஆசிரியர் நலனைப் பாதிக்கும் இரு அம்சங்கள்: வேலைப்பளு, பெற்றோர் எதிர்பார்ப்பு

பாலர்பள்ளி ஆசிரியர் நலனைப் பாதிக்கும் இரு அம்சங்கள்: வேலைப்பளு, பெற்றோர் எதிர்பார்ப்பு

வேலைப்பளுவும், பெற்றோர்களின் அதிக எதிர்ப்பார்ப்புகளும் ஆசிரியர்களின் நலன்களைப் பாதிக்கும் இரு முக்கிய அம்சங்கள் என்பது ஓர் ஆய்வின் வழியாகத் தெரிகிறது.

‘பிரிஸ்கூல் மார்க்கெட்’ எனும் கல்வி ஆலோசனை மற்றும் சமூக அறநிறுவனம் அந்த ஆய்வை நடத்தியது.

அதில் கலந்துகொண்ட பாலர் பள்ளி ஆசிரியர்கள் தங்களைப் பாதிக்கும் அம்சங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் 480க்கும் மேற்பட்ட பாலர்பள்ளி ஆசிரியர்களிடம் பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில், பணிச்சுமைக்கு அடுத்தபடியாகப் பெற்றோரின் எதிர்பார்ப்புகள், ஊழியர் பற்றாக்குறை போன்ற சவால்கள் முக்கியக் காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஆய்வில் பங்கேற்றவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவானது முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் அனுபவம் கொண்டவர்கள் வரை அடங்குவர்.

ஆசிரியர்கள் தினத்திற்கு முன்னதாக, ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியாளர்களுக்கான பாராட்டு விழா ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது. அதில் இந்த ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகளை அச்சமூக நிறுவனம் வெளியிட்டது.

அரசாங்க ஆதரவு பெறும் பாலர்பள்ளிகளில் முழுநேரக் குழந்தைப் பராமரிப்பு மற்றும் சிசுப் பராமரிப்புக்கான கட்டணங்கள் 2030க்குள் முறையே மாதம் $150, $300 எனக் கணிசமாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தனது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்த சில நாள்களிலேயே இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அத்தகைய சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குள் மேலும் 1,800 சிசுப் பராமரிப்பு கல்வியாளர்களை அரசாங்கம் பணியமர்த்தும் என்று ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தங்களின் பராமரிப்பில் இருக்கும் குழந்தைகளிடமிருந்து விலகி, பாடப் பொருள்களைத் தயாரிப்பதற்கு எனத் தனிப்பட்ட கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என நம்புவதாக பாலர்பள்ளி ஆசிரியர்கள் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளேட்டிடம் கூறினர்.

மேலும், பாராட்டுகள், தோளைத்தட்டிக் கொடுப்பதன் மூலமாக தங்களின் மனபலம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் தங்களின் வேலையை நம்பிக்கையுடன் செய்யப் பள்ளி நிர்வாகத்திடமிருந்து வலுவான ஆதரவு தேவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

‘லிட்டில் அட்லஸ் பிரிஸ்கூல்’ என்ற தனியார் பாலர்பள்ளியில் பணிபுரியும் 31 வயதான மூத்த ஆசிரியர் நஜீபா மெஹ்ஜபீன், தமது பள்ளியில் ஆசிரியர்களுக்காக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் இத்தகைய குழந்தைகளுடன் தொடர்பு இல்லாத நேரமாக ஒதுக்கப்படுகிறது என்றார். இது, இறுதியில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாக உயர்த்தப்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

27 வயதான இல்ஸா, தமது மையத்தில் ஆசிரியர்களின் திட்டமிடல் நேரத்திற்காக மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு மணிநேரம் ஒதுக்கப்படுகிறது என்றும் தங்களின் திட்டமிடலை கவனத்துடன் செய்து முடிக்க இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் இதனை ஆசிரியர்கள் மிகவும் நன்றியுடன் உணர்வதாகவும் கூறினார்.

டவுன்டௌன் ஈஸ்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஜாலான் பெசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஷான் லோ, பெற்றோரின் எதிர்பார்ப்புகள் காலப்போக்கில் அதிகரித்துள்ளன என்று கூறினார்.

கல்விச் சேவை சங்கத்தின் ஆலோசகருமான திரு லோ, பெற்றோர் ‘அடிக்கடி’ புதிய தகவல்களை எதிர்பார்க்கிறார்கள், சிலரின் தவறான நடத்தைகள் குறித்தும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துகள் வந்துள்ளதாகவும் கூறினார்.

“ஆசிரியர்கள் மீது எந்தத் தவறும் இல்லாதபோதும் அதிகாரப்பூர்வமாகப் புகார்களை அளிப்பது, காவல்துறையிடம் வழக்குப் பதிவு செய்வது போன்ற செயல்களும் இவற்றில் அடங்கும். விசாரணையின் முடிவில் ஆசிரியர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது தெரியவந்தாலும் ஆசிரியரின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

“பெற்றோர் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆசிரியர்கள் நம்முடைய பங்காளிகள், சேவை வழங்கும் வியாபாரிகள் அல்லர் என்பதை மனத்தில் கொண்டு,” என்று திரு லோ வலியுறுத்தினார்.