தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
சென்னை: டாஸ்மாக் வழக்கில் கைதுக்கு பயந்து தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி நேற்று ஆஜரானார்.
தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது. அதன்படி, இருவரும் தினமும் காலை, மாலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இதனிடையே, டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதிய வழக்கை பதிவு செய்தனர். அதன்பின், 2 நாட்களாக செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்தார். கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியதோடு, அவரை கைது செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று காலை செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது அவர்களிடம் சுமார் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது பதிவு செய்துள்ள புதிய வழக்கு நிலைக்காது. அமலாக்கத் துறையின் ஆவணங்களை வைத்தே இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். ஆக்கப்பூர்வமான அரசு என்பது மக்கள் குறைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த அரசு வழக்குகள் போடுவதிலேயே முனைப்பு காட்டுகிறது.
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அவற்றை சட்டப்படி எதிர்கொண்டு, உண்மையில்லை என்பதை நிரூபிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே, டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜிக்கு விரைவில் சம்மன் அனுப்பி, நேரில் வரவழைக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.