தலைவனுக்கே ஒன்னும் தெரியல.. எல்லாம் குடிகாரர்கள்.. விஜய்யையும், அமைச்சர்களையும் விமர்சித்த இசையமைப்பாளர்
சென்னை: நடிகர் விஜய் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படாது என்று நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பும் வெளியிட்டார். அது பலரிடம் கண்டனத்தை பெற்ற சூழலில்; இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சகட்டுமேனிக்கு விளாசி பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனித்து போட்டியிட்டு மொத்தம் 108 தொகுதிகளில் வென்றது. தனி பெரும்பான்மை கிடைக்காததால்; விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தார் விஜய். இந்தக் கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு முன்புவரை திமுகவின் கூட்டணியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்சிகளில் இடதுசாரிகள் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமும் கொடுத்திருக்கிறார் விஜய்.
பரந்தூர் விவகாரம்: ஆட்சியமைத்ததிலிருந்து விஜய்யின் செயல்பாடுகளுக்கு விமர்சனமும், ஆதரவும் ஒருசேர எழுந்துவருகிறது. இதற்கிடையே ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 'தவெக ஆட்சிக்கு வந்தால் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படாது' என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் விஜய். இப்போது சொன்னபடியே அந்தத் திட்டத்தை ரத்து செய்து சட்டப்பேரவையில் அறிவித்தும்விட்டார். அவரது இந்த முடிவு பனையூர் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வாயை விட்ட ஆதவ்: ஆனால் பெரும்பாலானோர் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பையே பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கும்போது, புதிய விமான நிலையம் அவசியம். விஜய் இதை ரத்து செய்திருப்பதன் மூலம் நம் மாநிலம் பின்னோக்கி போய்விடும் என அச்சப்படுகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு சட்டப்பேரவையிலும் திமுக சார்பில் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஆதவ்வோ இதிலும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரை இழுத்துவிட; திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்திருந்தார்.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு: மேலும் தங்கம் தென்னரசு பேசுகையில், புதிய விமான நிலையம் அவசியம். அது இனிமேல் எப்போது வரப்போகிறது என்று பல கேள்விகளை எழுப்பினார். மேலும், பரந்தூரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்பது குறித்தும் நீண்ட விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் அந்த வீடியோவை தனது முகநூலில் பகிர்ந்திருகும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், "மக்களின் பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்படுகிற திரைப்படங்களில் நடிக்கிற நடிகனுக்கு அடிமையாகி, அவன் படம் வெளியாகும்போது போஸ்டர் ஒட்டி, கட்-அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்து, குடித்துவிட்டு குத்தாட்டம் போடுகிறவனையெல்லாம் சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராகவும் ஆக்கினால், திடீரென சமூக, பொருளாதார, அரசியல் அறிவு வந்துவிடுமா என்ன?
தலைவனுக்கே ஒரு மண்ணும் தெரியாதபோது, இந்தக் கூட்டத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? தமிழ்நாட்டின் அழிவுகாலம் தொடங்கிவிட்டது. இந்த அழிவை சரிசெய்ய பல ஆண்டு காலம் ஆகும். இந்த 100 அறிவற்றவர்களால் ஒரு தலைமுறையின் எதிர்காலமே நாசமாகிறது என்பதை பின்னாளில்தான் உணர்வீர்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.