தலைவர்கள் மட்டுமே இருக்கும் கட்சி; அதிமுக மீது செங்கோட்டையன் மறைமுக விமர்சனம்
தலைவர்கள் மட்டுமே இருக்கும் கட்சி; அதிமுக மீது செங்கோட்டையன் மறைமுக விமர்சனம்
முதல்வர் விஜய் இருக்கும் வரை அவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
Published : August 23, 2026 at 10:37 PM IST
ஈரோடு: இன்னும் சில நாட்களில் ஒரு சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று அதிமுகவை அமைச்சர் செங்கோட்டையன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், "தமிழகத்தில் பல ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக, திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்துவிட்டார் முதலமைச்சர் விஜய். எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள், பேரவை தலைவரைப் பார்த்து கெஞ்சுகிறார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனக் கூறுகிறார்கள். அந்த கட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
நடந்து முடிந்த சட்டமன்ற நாங்கள் 108 பேர் வெற்றி பெற்றோம். ஆளுநர் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என்றார். இதற்கிடையே, தவெக ஆட்சியமைப்பதை தடுக்க திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்று நினைத்தார்கள். வடதுருவமும் தென்துருவமும் இணையுமா? அப்படி இணைந்தால் அதிமுக இருக்காது.
அதன் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அழைத்து, அவர்களுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்து ஆட்சியமைத்தார் தவெக தலைவர் விஜய். தமிழ்நாட்டில் 1967-க்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது என்ற வரலாறு முதலமைச்சரால் நிகழ்ந்துள்ளது.
தவெக ஆட்சி 6 மாதம்தான் இருக்கும் என்றார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன். முதல்வர் விஜய் இருக்கும் வரை அவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
இன்னும் சில நாட்களில், ஒரு சில கட்சியில் (அதிமுக) தலைவர் மட்டுமே இருப்பார்கள். மதிமுகவைப் போல நாங்கள் கட்சி நடத்தக் கூடாதா? என்று அவர்களே சொல்லி விட்டார்கள். 10 பேர் இருந்தால் போதும்; கட்சி இருந்தால் போதும்; கட்சி கம்பெனியாக இருந்தால் போதும்; அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள்.
முதலில் எதிர்க்கட்சியாகவாவது வருவோம் என்று நினைத்தார்கள். அதையும் காலி செய்து விட்டீர்கள். செங்கோட்டையனை ஒழித்துவிட்டுத்தான் அடுத்த வேலை என்று சொன்னார்கள். அவர்கள் என் எதிரில் அமர்ந்து இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பேரவை தலைவரை பார்த்து, கெஞ்சுகிறார்கள். இதுதான் அவர்களின் நிலை. ஒவ்வொருவரும் கற்பனை உலகில் இருக்கிறார்கள். இந்த கற்பனை உலகத்தை தூள் தூளாக்கி காட்டியவர் நமது வெற்றிக் கழகத் தலைவர் விஜய்" என்று செங்கோட்டையன் கூறினார்.