📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 01, 2026 06:30 AM

தமிழ் மொழி ஆர்வத்தை வளர்க்கும் ‘மர்ம தேசம் 4.0’

தமிழ் மொழி ஆர்வத்தை வளர்க்கும் ‘மர்ம தேசம் 4.0’

மாணவர்களின் தமிழ்மொழித் திறன், படைப்பாற்றல், விமர்சனச் சிந்தனை, குழு முயற்சி ஆகியவற்றைச் சோதிக்கும் நோக்கில் ‘மர்ம தேசம் 4.0’ நான்காம் முறையாக நடைபெற்றது.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு மீதான ஆர்வத்தை வளர்க்கும் நோக்கிலும், இலக்கியத்தை ஈர்க்கும் வடிவில் வழங்கும் வகையிலும் அப்போட்டி வடிவமைக்கப்பட்டது.

அப்போட்டி ‘தினம் ஒரு உயிர்’ என்ற நாவலை வாசிக்க பங்கேற்பாளர்களை ஊக்குவித்ததோடு, தமிழ் மர்ம இலக்கியத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. மேலும், புகழ்பெற்ற எழுத்தாளர்களான இந்திரா சௌந்தர்ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், சுஜாதா ஆகியோரின் சிறந்த படைப்புகளைத் தேடி வாசிப்பதற்கான வாய்ப்பாக மாணவர்களுக்கு அமைந்தது.

ஆறு விளையாட்டு நிலையங்கள்

விவாதம், கவிதை எழுதுதல், நேர்காணல்கள், சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் போன்ற பல்வேறு விறுவிறுப்பான நடவடிக்கைகள்மூலம் மாணவர்கள் கதையின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்தனர். அதே வேளையில், ஒரு விறுவிறுப்பான விளையாட்டுச் சூழலில் அவர்கள் தங்களது தமிழ்மொழித் திறனையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

வெற்றியாளர்கள்

உற்சாகமான பரிசளிப்பு விழாவுடன் நிறைவடைந்த இப்போட்டியில் விக்டோரியா பள்ளி முதலிடத்தையும், பீட்டி உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும், ராஃபிள்ஸ் கல்வி நிலையம் மூன்றாமிடத்தையும் பிடித்தன.

தேசிய நூலக வாரியம், ‘தமிழா’ என்ற இளையர் அமைப்போடு இணைந்து, உயர்நிலை 1, 2 மாணவர்களுக்காக நடத்திய நூலக ஓட்டப் பந்தயத்தின் ‘மர்ம தேசம் 4.0’, 18 உயர்நிலைப் பள்ளிகளை ஒன்றிணைத்தது.

ஜூலை 17ல் தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்ற வெற்றிகரமான நான்காவது பதிப்பின் மூலம், ‘மர்ம தேசம்’ நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தைப் புதுமையான வழியில் அனுபவிப்பதற்கான ஒரு தளத்தை வழங்கியது. அத்துடன், மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், தமிழ்மொழியின் மீதான வாழ்நாள் பற்றை வளர்க்கவும் இந்நிகழ்ச்சி ஊக்குவித்தது.