📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 11, 2026 11:00 AM

தமிழாய்வு: என்ன செய்ய வேண்டும் சென்னைப் பல்கலைக்கழகம்?

தமிழாய்வு: என்ன செய்ய வேண்டும் சென்னைப் பல்கலைக்கழகம்?

உலகின் தொன்மையான செம்மொழி இலக்கியச் செழுமை, இலக்கண மரபு, கல்வெட்டு வளம், ஓலைச்சுவடிகள், அகராதியியல், மொழியியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல், சமய இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் எனப் பல துறைகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான அறிவு மரபைப் பெற்ற மொழி தமிழ்.

இந்த மரபைப் பாதுகாத்து, ஆராய்ந்து, அடுத்த தலை முறைக்கு எடுத்துச்செல்லும் பொறுப்பு பள்ளிகளுக்கோ விழாக்களுக்கோ மட்டும் உரியது அல்ல. அந்தப் பொறுப்பு முதன்மையாகப் பல்கலைக்கழகங்களின் தோள்களில் இருக்கிறது.

ஒரு மொழி உயிரோடு வாழ வேண்டும் என்றால், அந்த மொழி சார்ந்த பல்கலைக்கழகங்கள் உயிரோடு இருக்க வேண்டும். தமிழகத்தில் அந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாக ஏற்று, 150 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தமிழாய்வுக்கு வழிகாட்டியாக விளங்கிவரும் நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகம்.

தமிழாய்வின் தலைநகரம்

1857ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. அதன் தமிழ்த் துறைகள், தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழ் இலக்கிய ஆய்வின் வளர்ச்சியிலும் அழியாத முத்திரையைப் பதித்துள்ளன.

உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பேரகராதித் (Tamil Lexicon) திட்டம், தமிழறிவின் மிகப்பெரிய அறிவுக் களஞ்சியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் உருவாக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு தமிழறிஞர்களால் என்றும் போற்றப்படுகிறது. இங்கிருந்து உருவான ஆய்வுகள் இந்திய எல்லைகளைத் தாண்டி உலகத் தமிழியலுக்கே அடித்தளமாக அமைந்தன.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளின் வரலாறு என்பது கட்டிடங்களின் வரலாறு அல்ல; அறிஞர்களின் வரலாறு. ரா.பி.சேதுப்பிள்ளை,

எஸ்.வையாபுரிப்பிள்ளை, மு.வரதராசனார் (மு.வ.), ந.சஞ்சீவி, சி.பாலசுப்பிரமணியன் (சி.பா.), பொற்கோ, அ.மணவாளன், இ.சுந்தரமூர்த்தி, மா.செல்வராசன், வ.ஜெயதேவன், ந.தெய்வசுந்தரம், பொன்னுசாமி, வீ.அரசு, ய.மணிகண்டன், பழனி, ஏகாம்பரம் உள்ளிட்ட பல அறிஞர்கள் இத்துறைகளில் பணியாற்றி, தமிழ் ஆய்வின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.