தமிழக சட்டசபையை வழி நடத்திய முதல் பெண் சபாநாயகர்: அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் பாராட்டு
சென்னை: தமிழக சட்டசபையில், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமையை, தவெக எம்எல்ஏ சத்தியபாமா பெற்றார்.
சட்டசபை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியோர் உள்ளனர். சபாநாயகர் இல்லாத நேரங்களில், துணை சபாநாயகர், சட்டசபையை வழி நடத்துவார். இவர்கள் இருவரும் இல்லாத நேரங்களில், சபையை வழி நடத்த, மாற்று தலைவர்களை, ஏற்கனவே சபாநாயகர் அறிவித்து உள்ளார்.
சட்டசபையில் இன்று செப்.2) கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வெளியே சென்றார். துணை சபாநாயகரும் இல்லாததால், மாற்று தலைவர்கள் பட்டியலில் இருந்த, திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏசத்தியபாமா, சட்டசபையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார்.
இதையடுத்து, தமிழக சட்டசபை வரலாற்றில், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, சபையை வழி நடத்திய முதல் பெண் என்ற பெருமையை, சத்தியபாமா பெற்றார். அவர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபோது, அனைத்து கட்சி எம்எல்ஏக்களும், மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ''இந்த ஆசனத்தில், ஒரு பெண் அமர வேண்டும் என்பது, அனைவரின் நீண்ட கால எதிர்பார்ப்பு. மாற்று தலைவராக, நீங்கள் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது; வாழ்த்துகள்,'' என்றார்.
சிறிது நேரத்தில், சபைக்கு திரும்பி வந்து, பொறுப்பை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியபோது, “மாற்று தலைவர், சபையை மிக சிறப்பாக நடத்தினார். அவ்வப்போது, இப்படிப்பட்ட வாய்ப்புகள் மாற்று தலைவர்களுக்கு வழங்குவதன் வழியே, பலருக்கு தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், அவரை அனுமதித்தேன்,'' என்றார்.