மீனாட்சி கோயில் கும்பாபிஷேக கல்வெட்டில் அறங்காவலர்கள் பெயர்; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக கல்வெட்டுக்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி தாக்கல் செய்த மனு: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடக்கிறது. இது தொடர்பான முன்னேற்பாடு பணி குறித்து அறங்காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஆலோசனை கேட்பதில்லை. கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் அறங்காவலர்களின் பெயர்கள் உரிய முறையில் இடம்பெறவில்லை. இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். எவ்வித தலையீடு, இடையூறு இன்றி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சட்டப்பூர்வ கடமைகளை மேற்கொள்ள அனுமதிக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். மற்ற 4 அறங்காவலர்கள் தரப்பில் நிலைப்பாடு குறித்து வாதத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அழைப்பிதழ் தயாரிக்கும் விவகாரத்தில் கோயில் செயல் அலுவலர் தனது அதிகார வரம்பை மீறி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். இதன் மூலம் அறங்காவலர்கள், அறநிலையத்துறை கமிஷனர், செயலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். கமிஷனரின் ஒப்புதல் இன்றி செயல் அலுவலர் முடிவெடுத்து, அழைப்பிதழ் தயாரிப்பதில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் நடைமுறையை மாற்றியமைத்துள்ளார்.
அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றியமைக்க முடியாது. கும்பாபிஷேக கல்வெட்டுக்களில் அறங்காவலர்களின் பெயர்கள் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.