📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 13, 2026 11:01 AM

தமிழக காடுகளில் 3,170 யானைகள்

தமிழக காடுகளில் 3,170 யானைகள்

உலக யானைகள் தினத்தையொட்டி அவற்றை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்றும் தமிழக காடுகளில் 3,170 யானைகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ந் தேதி உலகம் முழுவதும் உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத் தில் யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல், மனிதயானை மோதலைத் தணித்தல் ஆகியவற்றிற்கு நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட அணுகுமுறைகள் மூலம் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தின் வனப்பகுதிகளுடன் இயற்கையாகத் தொடர்ச்சியடைந்து, பரந்த மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பாக அமைந்துள்ளன.

2025-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9.1 லட்சம் எக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் 5 யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் மனிதவனவிலங்கு மோதல்களை தடுக்க இந்த ஆண்டு ரூ.20 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். பாதுகாப்போம் யானைகளை, காடுகளைப் பாதுகாப்போம். வனத்துறையுடன் இணைந்து மனிதயானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்ற உறுதியை அனைவரும் ஏற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.