தமிழகத்தில் அரசு பஸ் சேவைகளை குறைக்க முடிவு
மதுரை: தமிழகம் முழுதும் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில், குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பஸ் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் வருவாயை அதிகரிப்பதுடன், டீசல் செலவை குறைக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக அனைத்து மண்டலங்களில் பஸ் சேவையை குறைப்பதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக, விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 136 புறநகர் பஸ் சேவைகள் குறைக்கப் பட்டுள்ளன.
போக்குவரத்து குறைவாக உள்ள செவ்வாய், புதன், வியாழனில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், எரி பொருள் செலவு கணிசமாக குறைகிறது.
உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள், முகூர்த்த நாட்களில் பயணியர் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும் போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சி.ஐ.டியு., தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கிராமப்புறங்களில் மாணவர்கள், தினசரி வேலைக்கு செல்வோர் உள்ளிட்டோர் அரசு பஸ் சேவையை முழுமையாக நம்பியுள்ளனர். வருவாய் குறைவாக உள்ளது என்பதற்காக நிறுத்தப்பட்டால் அரசின் சேவைக்கும், தனியாருக்கும் என்ன வித்தியாசம்' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'அதிக பஸ் சேவைகள் உள்ள வழித்தடங்கள், தனியார் போட்டி இல்லாத வழித்தடங்களை தேர்ந்தெடுத்து, அதில் குறைவான வருவாய் உள்ள அரசு பஸ் சேவைகள் மட்டுமே நிறுத்தப்படவுள்ளன. 'இது போக்குவரத்து கழக செயல்திறனை மேம்படுத்துவதற்கான தற்காலிக நடவடிக்கை என்பதால் மக்களை பாதிக்காது' என்றனர்.