📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 07, 2026 04:30 PM

தமிழகத்தில் மதுபானங்களுக்குப் புதிய வரி

தமிழகத்தில் மதுபானங்களுக்குப் புதிய வரி

சென்னை: மதுபானக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவு, சமூகப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு புதிய தீர்வையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மதுபானம் உட்கொள்ளுதலும் மதுபானம் அடைக்கப்படும் கண்ணாடி, நெகிழி போத்தல்களும் பொதுச் சுகாதாரத்துக்கும் வனவிலங்குகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாதிப்புகளைக் குறைக்கத் தகுந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

மதுபான விற்பனை மீது ‘சுற்றுச்சூழல், சமூக நலத் தீர்வை’ விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி, மதுபானக் கொள்கலன்களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்தல், மது அடிமைகளுக்கான மறுவாழ்வு மையங்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார உதவிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

மேலும், காடுகள், வனவிலங்குகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பிற நல நோக்கங்களுக்கும் இத்தொகை பயன்படும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.