📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 21, 2026 03:01 PM

6, 7, 8

6, 7, 8

6, 7, 8 - வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு ! ரெடியான மெனு !

நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவுபடுத்த உள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தின் தொடக்க விழா சென்னையின் திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 8.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர் :

காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை இந்த விரிவாக்கம் உள்ளடக்கும்.

மொத்தம் 15,454 பள்ளிகளில் விரிவாக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் காலை உணவை தவறவிடாமல் பள்ளிக்கு வருவதற்கும், பள்ளி நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பெறுவதற்கும் இந்தத் திட்டம் உதவும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு :

திட்டத்தின் விரிவாக்கத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலை உணவுத் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.

விரிவாக்கப்பட்ட திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொள்ள வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 447 பள்ளிகளில் செயல்படுத்தல் :

சென்னை மாநகரப் பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டமைப்பைப் பயன்படுத்தி, 447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் தொடர்புடைய அமைப்புகள் மூலம் உணவு தயாரித்தல் மற்றும் மாணவர்களுக்கு விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

உணவின் தரம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் :

காலை உணவு தயாரிக்கப்படும் சமையலறைகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் பகுதிகள் தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சூடான, சத்தான மற்றும் போதுமான அளவு உணவு கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாரத்தில் 5 நாட்களும் வெவ்வேறு காலை உணவுகள் :

மாணவர்களுக்கு ஒரே வகையான உணவு தொடர்ந்து வழங்கப்படாமல், வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான காலை உணவுகள் வழங்கும் வகையில் உணவுப் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.

திங்கள் – உப்புமா வகை :

திங்கட்கிழமை உப்புமா வகை உணவுகள் வழங்கப்படும். இதில்,

* ரவா உப்புமா + காய்கறி சாம்பார்* சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்* அரிசி உப்புமா + காய்கறி சாம்பார்* கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகை வழங்கப்படும்.

செவ்வாய் – காய்கறி கிச்சடி :

செவ்வாய்க்கிழமை கிச்சடி வகை உணவு வழங்கப்படுகிறது.

* ரவா காய்கறி கிச்சடி* சேமியா காய்கறி கிச்சடி* சோள காய்கறி கிச்சடி* கோதுமை ரவா காய்கறி கிச்சடி

ஆகியவற்றில் ஒரு வகை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

புதன் – பொங்கல் வகை :

புதன்கிழமை பொங்கல் வகை காலை உணவாக இடம்பெறும்.

* ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்* வெண் பொங்கல் + காய்கறி சாம்பார்

ஆகியவற்றில் ஒரு வகை வழங்கப்படும்.

வியாழன் – மீண்டும் உப்புமா வகை :

வியாழக்கிழமையும் உப்புமா வகை உணவு வழங்கப்படும். இதில்,

* சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்* அரிசி உப்புமா + காய்கறி சாம்பார்* ரவா உப்புமா + காய்கறி சாம்பார்* கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

ஆகியவற்றில் ஒரு வகை இடம்பெறும்.

வெள்ளி – இனிப்பு வகை :

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை இனிப்பு வகை காலை உணவாக வழங்கப்படும்.

* சர்க்கரைப் பொங்கல்* ரவா கேசரி* சேமியா கேசரி

செங்கல்பட்டு, திருப்பூரில் மட்டும் தாமதம் :

தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அங்கு திட்டத்தின் விரிவாக்கம் பின்னர் மேற்கொள்ளப்பட உள்ளது.

மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை கருத்தில் கொண்டு, கூடுதல் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் காலை உணவு கிடைக்கும் வகையில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.