📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 12, 2026 05:25 PM

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 18

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 18

சென்னை: தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை முதல் வரும் 18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (ஜூலை 13) முதல் வரும் 18-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 16-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழக கடலோர மீனவர்களுக்கு வரும் 14-ம் தேதி வரை எச்சரிக்கை ஏதும் இல்லை.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.