📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 28, 2026 03:30 PM

தமிழ்நாடு பல்கலை. வரலாற்றில் முதல்முறை.. 3

தமிழ்நாடு பல்கலை. வரலாற்றில் முதல்முறை.. 3

தமிழ்நாடு பல்கலை. வரலாற்றில் முதல்முறை.. 3-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசு நிகழ்ச்சியில் தேசிய பாடலான வந்தே மாதரத்தை கட்டாயமாகப் பாட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அறிவிப்பில், அரசு நிகழ்ச்சியில் முதலாவதாக ’வந்தே மாதரம்’ பாடலைத்தான் பாட வேண்டும் என்றும், அதன் பிறகே தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது. அதேபோல ’வந்தே மாதரம்’ பாடலின் அதிகாரப்பூர்வ முழுப் பதிப்பான 6 பத்திகளையும் முழுமையாகப் பாட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வந்தே மாதரத்தின் இறுதிப் பத்திகளில் இந்துக் கடவுள்கள் குறித்த பாடல்கள் இருந்ததால் இதற்கு எதிர்ப்பும் எழுந்தது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றபோதும், அமைச்சர்கள் பதவியேற்றபோதும் முதலில் வந்தே மாதரம் பாடலின் முழுப் பத்திகளும் பாடப்பட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதுகுறித்து முதல்வர் விஜயும் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கும் நிலையில், மக்கள் மாளிகை உத்தரவிட்டதன்படி, ’வந்தே மாதரம்’ பாடல் முதலிலும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அப்போதே இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் நிகழ்ச்சியை புறக்கணித்தார். மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன்படி ’வந்தே மாதரம்’ பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது.

இதுவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.