தங்க விலை சரிவு: வட்டி விகிதம் மற்றும் பணவீக்கத்தின் தாக்கம்
வாஷிங்டன்: அமெரிக்க வட்டி விகிதம் குறித்து சர்ச்சைக்குரிய முடிவெடுக்கப்படலாம் என்ற ஊகத்துக்கு இடையில் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. அதேநேரம், மத்திய கிழக்கு மோதல்கள் தற்போது தணிந்திருப்பது பணவீக்க அச்சத்தைக் குறைத்துள்ளது.
தங்க விலை அவுன்சுக்கு 0.8 விழுக்காடுவரை வீழ்ச்சிகண்டு கிட்டத்தட்ட 4,040 அமெரிக்க டாலரை நெருங்கியது.
வட்டி விகிதம் குறித்த முடிவை மத்திய வங்கி புதன்கிழமை (ஜூலை 29) வெளியிடவிருக்கிறது. வர்த்தகர்கள் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கடந்த மாதம் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைந்திருந்தது. முன்னதாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் சண்டை மூர்க்கமானதால் எண்ணெய் விலையும் கூடியிருந்தது. இவற்றால் கொள்கை வகுப்பாளர்கள் குழப்பமடைந்தனர்.
வட்டி விகிதம் கால் விழுக்காட்டுப் புள்ளி உயர்வதற்குக் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக சிட்டாடல் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய வங்கித் தலைவர் கெவின் வார்ஷின் நம்பகத்தன்மையை இந்த நடவடிக்கை பலப்படுத்தும் என்று அது கூறுகிறது.
ஐந்து மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது போர் தொடுத்ததிலிருந்து தங்கத்தின் விலை கிட்டத்தட்ட காற்பங்கு சரிந்துள்ளது. எரிசக்தி விலைகள் கூடியதால் ஏற்பட்ட பணவீக்க நெருக்குதல்களே இதற்குக் காரணம்.
சிங்கப்பூர் நேரப்படி காலை மணி 10.25க்குத் தங்கத்தின் சந்தை விலை 0.7 விழுக்காடு சரிந்து அவுன்சுக்கு 4,047.22 அமெரிக்க டாலராக வர்த்தகமானது. வெள்ளியின் விலை 1.7 விழுக்காடு வீழ்ச்சிகண்டு அவுன்சுக்கு 57.39 அமெரிக்க டாலராக இருந்தது.
மாலை நிலவரப்படி, சிங்கப்பூரில் ஒரு கிராம் தங்கத்தின் விலை $166.20.