தஞ்சை மாவட்டமே அதிர்ந்தது... கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டமே அதிர்ந்தது... கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பாக மூத்த தோழர் வீ.கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, திருவையாறு ஒன்றியத்தில், திருவையாறு, வரகூர், கருப்பூர், நடுக்காவேரி ஆகிய 4 இடங்களில் கூட்டுறவு வங்கிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனிஅய்யா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். பிரதீப்ராஜ்குமார், விவசாயிகள் சங்க நிர்வாகி எம்.ராம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.மதியழகன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.கதிரவன் மற்றும் எம். வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பூதலூர் தெற்கு ஒன்றியம் இராயமுண்டான்பட்டி, புதுக்குடி, புதுக்கரியாபட்டி, செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், நிர்வாகிகள் எஸ்.வியாகுலதாஸ், வி.ச ஒன்றியச் செயலாளர் தமிழரசன், வி.ச ஒன்றியத் தலைவர் சுந்தர வடிவேல், வி.ச ஒன்றிய துணைத் தலைவர் பாரதி, வி.ச ஒன்றியப் பொருளாளர் அறிவழகன், எல்.ராஜாங்கம், அரங்க.ராமஜெயம், முருகானந்தம், தங்கமணி, தமிழ்செல்வன், கெங்கை.பாலு, கிளைச் செயலாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செங்கிப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.தமிழரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு வகையிலும் கடன் வாங்கி சாகுபடி செய்து பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது படி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதேபோல் கரியப்பட்டியில் ஒன்றிய துணைத் தலைவர் முருகானந்தம் தலைமையிலும், இராயமுண்டான்பட்டியில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, எந்தவித நிபந்தனையுமின்றி சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 5 ஏக்கருக்கு உட்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி எந்தவித நிபந்தனையுமின்றி அனைத்துப் பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். வரவிருக்கும் சம்பா சாகுபடிப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள, விவசாயிகளுக்கு உடனடியாகப் புதிய பயிர்க்கடன்களை வழங்க வேண்டும்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்து பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, வாக்குறுதியளித்தபடி 50 சதவீதம் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி