தூய்மைப்பணியாளர்கள் கோட்டை முன் போராட்டம்
தூய்மைப்பணியாளர்கள் கோட்டை முன் போராட்டம்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தின் முன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி தூய்மைப்பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்டனர். அவர்களை அனுமதிக்காமல் காவல்துறையினர் எதிரே உள்ள பூங்காவில் காத்திருக்க வைத்தனர். அங்கு அரசுக்கு எதிராகவும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தும் பதாகைகளை ஏந்தி போராட முற்பட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
இதுதொடர்பாக போராட்டம் நடத்திவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக நீதி விடுதிகளில் 2012ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் ரூ.4,500, ரூ.5,000 என்ற அளவில்தான் ஊதியம் பெற்று வருகின்றனர். சாதாரண அரசு பணியாளருக்கு இருக்கக்கூடிய எந்த சலுகைகளும் ஊதிய உயர்வும் இல்லை, பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரமாக பணி நியமனம் செய்வது, பதவி உயர்வு உள்ளிட்ட செயல்பாடுகள் நடைபெறவில்லை. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிதர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.