டி காக்கை விரல் நீட்டி எச்சரித்த பவுமா.. களத்தில் ஆவேசம்.. தென்னாப்பிரிக்க அணியில் என்ன நடந்தது?
டி காக்கை விரல் நீட்டி எச்சரித்த பவுமா.. களத்தில் ஆவேசம்.. தென்னாப்பிரிக்க அணியில் என்ன நடந்தது?
ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது, அம்பயரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா மற்றும் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் இடையே களத்திலேயே கடும் வாக்குவாதம் வெடித்தது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 48வது ஓவரை லிசாட் வில்லியம்ஸ் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்து ஆஸ்திரேலிய பேட்டர் சேவியர் பார்ட்லெட்டின் காலில் பலமாகத் தாக்கியது. பந்துவீச்சாளர் மற்றும் வீரர்கள் அம்பயரிடம் எல்பிடபிள்யூ கேட்டு ஆக்ரோஷமாக முறையிட்டனர். ஆனால் கள அம்பயர் அவுட் தர மறுத்துவிட்டார்.
இதை அடுத்து அம்பயரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கேப்டன் பவுமாவுக்கும் விக்கெட் கீப்பர் டி காக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் விரல் நீட்டி கோபமாகப் பேசிக் கொண்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், சக வீரர் மார்கோ ஜான்சன் தலையிட்டு டி காக்கை சமாதானப்படுத்த முயன்றார். எனினும் கோபமடைந்த டி காக் அங்கிருந்து விறுவிறுவென விலகிச் சென்றார். இதன்பின் பவுமா எடுத்த டிஆர்எஸ் முடிவில் பந்து ஸ்டம்பைத் தாக்குவது உறுதி செய்யப்பட்டு, 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த பார்ட்லெட் அவுட் ஆனார்.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. சொந்த மண்ணில் முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பெறும் தொடர்ச்சியான 5வது வெற்றி இதுவாகும். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை விளையாடியுள்ள 16 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் 10 தொடர்களை வென்று தென்னாப்பிரிக்கா புதிய சாதனை படைத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா (103 ரன்கள்) மற்றும் டேவிட் மில்லர் (142 ரன்கள்) ஆகியோர் அபாரமாக சதம் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர்.