Toxic Box Office: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூலை 3 நாளில் முறியடித்த டாக்ஸிக்.. கருப்பு வசூலை காலி பண்ணுமா?
சென்னை: கேஜிஎஃப் 2 படத்துக்குப் பிறகு 4 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் வெளியானது. கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் முதல் வார வசூல் வேட்டையில் கில்லியாகவே டாக்ஸிக் திரைப்படம் செயல்பட்டு வருவது சினிமா உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல் தலைவரான அண்ணாமலை முதல் ஏகப்பட்ட பிரபலங்களே டாக்ஸிக் திரைப்படம் ஆபாசமாகவும் இளைஞர்களை கெடுக்கும் விதமாகவும் உருவாகியுள்ளதாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
ஆனால், யஷ்ஷின் இந்த புதிய முயற்சிக்கு தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிப்பதாக கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப் யஷ்ஷுக்கு முழு ஆதரவு அளித்துள்ளார்.
டாக்ஸிக் 3 நாள் வசூல்: சுமார் 500 கோடி பட்ஜெட்டில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், முதல் நாளிலேயே 150 கோடி வசூல் என கேவிஎன் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது. ஆனால், 2வது நாள் வசூல் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிடவில்லை. நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக பெருமளவு வசூல் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது. சாக்னிக் தகவல் படி 3 நாட்களில் இந்தியாவிலேயே இந்த படம் 150 கோடி வசூலை கடந்துள்ளதாகவும் ஓவர்சீஸ் வசூலுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 221.45 கோடி வசூலை இதுவரை ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலிஷ் வெர்ஷன் என்ன ஆச்சு?: லயன்ஸ்கேட் எனும் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஆங்கிலத்திலும் டாக்ஸிக் படத்தை வெளியிட்டு இருந்தார் யஷ். ஆனால், வெளிநாடுகளில் சாதாரணமாக இந்திய படங்கள் செய்யும் வசூலை கூட டாக்ஸிக் திரைப்படம் செய்யாமல் போனது தான் படக்குழுவுக்கு பயங்கர அதிர்ச்சியாக மாறியுள்ளது என்கின்றனர். ஸ்டன்ட் ஆக்ஷன் மற்றும் ஆபாச காட்சிகள் வெளிநாடுகளில் க்ளிக் ஆகும் என போட்ட கணக்கும் வேஸ்ட் ஆகிவிட்டது என்றும் எமோஷனல் கனெக்ட் சரியாக இல்லையென்றால் எந்தவொரு படமும் ரசிகர்களை கவராது என்பதற்கு டாக்ஸிக் திரைப்படமும் சான்றாக மாறியுள்ளது என்கின்றனர்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் காலி.. அடுத்து கருப்பு: இந்த மாதம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படமாக தி ஒன் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் 200 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், 3 நாட்களில் அந்த வசூலை டாக்ஸிக் நெகட்டிவ் விமர்சனங்களுடனே முந்தியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை தமிழில் அதிக வசூல் ஈட்டிய ஜன நாயகன் மற்றும் கருப்பு படங்களின் வசூலை முதல் வார இறுதிக்குள் முறியடிக்குமா என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் ஆவலுடன் பார்க்க காத்திருக்கின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் அதிகரித்தால், அதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.