📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 18, 2026 02:34 PM

ட்ரூ ஃபிட்னஸ், ட்ரூ யோகா நிலையங்கள் மூடல்: உள்துறைக் குழு வழங்கும் சலுகை

ட்ரூ ஃபிட்னஸ், ட்ரூ யோகா நிலையங்கள் மூடல்: உள்துறைக் குழு வழங்கும் சலுகை

சிங்கப்பூரில் இயங்கிவந்த ட்ரூ ஃபிட்னஸ், ட்ரூ யோகா நிலையங்கள் வர்த்தகப் போட்டியின் காரணமாக ஹாங்காங்கில் செயல்படும் அதன் தலைமையகத்தால் செப்டம்பர் 10ஆம் தேதி மூடப்பட்டன.

மூடப்பட்ட இடங்களில் உறுப்பினர்களாக இருந்த உள்துறைக் குழுவினர்களுக்கு உதவும் வகையில் ‘ஹோம்டீம்என்எஸ்’ அமைப்பில் உள்ள உடற்பயிற்சி நிலையங்களின் வசதிகளை மூன்று மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பங்கள் செய்யலாம்.

அதன் விவரங்களை ஹோம்டீம் என்எஸ் அமைப்பு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஹோம்டீம் வளாகங்களில் உள்ள ‘ஃபிட்னஸ் வொர்க்ஸ் ஜிம்’ என்ற உடற்பயிற்சி நிலையங்களைப் பயன்படுத்திக்கொள்ள உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

அந்தச் சலுகை மூடப்பட்ட இரு நிலையங்களிலும் உறுப்பினர்களாக இருந்த உள்துறையின் முழுநேர தேசிய சேவையாளர்களுக்கும் உள்துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதன்படி காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைகளின் முழுநேரத் தேசியச் சேவையாளர்கள், உள்துறைக் குழுவின் அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருடன் ஹோம்டீம் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பொதுமக்களும் தகுதிபெறுவர்.

இந்த இலவச உடற்பயிற்சிக் கூடப் பயன்பாட்டுக்கான சிறப்புச் சலுகை, உடல் ஆரோக்கியத்தையும் நலனையும் பேணும் உறுப்பினர்கள் அவர்களது நடைமுறைகளைத் தொடரும் நோக்கில் வழங்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அச்சலுகையைத் தொடங்கிக்கொள்ள விருப்பமுள்ளோர் உள்துறைக் குழுவின் ‘ஃபிட்னஸ் வொர்க்ஸ் ஜிம்’ நிலையங்களை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) முதல் அக்டோபர் 15ஆம் தேதிவரையில் நேரில் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விவரங்களை உறுதி செய்யவேண்டும்.

அங்கு அவர்கள் தாம் உள்துறைக் குழு அதிகாரி, தேசியச் சேவையாளர் அல்லது உறுப்பினர் என்பதையும் தற்போதைய ட்ரூ ஃபிட்னஸ், ட்ரூ யோகா உறுப்பினர் என்பதையும் ஆவணங்களுடன் உறுதி செய்யவேண்டும்.