📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 31, 2026 12:33 AM

"உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகும் வரை ஓயமாட்டோம்"

"உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகும் வரை ஓயமாட்டோம்"

"உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகும் வரை ஓயமாட்டோம்" - ராகுல் காந்தி ஆவேசம்

"நாடாளுமன்றத்திற்குள் எங்களைப் பேச அனுமதிக்காவிட்டால், நாங்கள் வேறு வழிகளில் தொடர்ந்து தீவிரமாக போராடுவோம்" என்று ராகுல் தெரிவித்தார்.

Published : July 29, 2026 at 11:01 PM IST

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல் காந்தி இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களின் புகைப்படங்களைத் திரையிட்டு காண்பித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "மக்களவையில் இன்று மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முயன்றபோது ஆளுங்கட்சி அமைச்சர்கள் என் உரையைத் தடுத்து முடக்கினர்.

அவையை ஒழுங்குபடுத்துமாறு சபாநாயகரிடம் நான் பலமுறை கோரியும், ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு ஆகிய இரு அமைச்சர்களும் தொடர்ந்து குறுக்கிட்டு ன்னை பேசவிடாமல் தடுத்தனர். நான் எனது முந்தைய பேச்சுகளுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருப்பேன்.

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் வீதிகளில் இறங்கி போராடிய மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள் மீது மின்சார அதிர்வு தரும் லத்திகள், ஆணிகள் அடிக்கப்பட்ட கட்டைகளைக் கொண்டு போலீஸார் இரக்கமின்றித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டதில் ஒரு மாணவர் பார்வையை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக, எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளும் மாணவர்களை அச்சுறுத்த ஏவப்பட்டுள்ளனர்.

டெல்லி போலீஸாரும் அதிரடிப்படையும் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. நாடாளுமன்ற வீதியில் அமித் ஷா தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளில் பேசிக் கொண்டிருந்ததை நானே நேரில் பார்த்தேன்.

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அவரே உத்தரவிட்டிருக்க வேண்டும்; அல்லது இத்தாக்குதல் குறித்து அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களில் எதுவாக இருந்தாலும் அவர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர். எனவே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமர் மோடி பதவியில் இருந்து நீக்கி, நடந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா, எதற்கும் உதவாது. வினாத்தாள் கசிவை தடுக்க முடியாது என்று அரசே ஒப்புக்கொள்கிறது. அவர்கள் தண்டனைக் காலத்தை 1 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்துகிறார்கள். ஆனால், அவர்கள் யாரையும் தண்டிப்பதில்லை. வினாத்தாள் கசிவே இல்லாத முழுமையான பாதுகாப்பு முறையைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

நாடாளுமன்றத்திற்குள் எங்களைப் பேச அனுமதிக்காவிட்டால், நாங்கள் வேறு வழிகளில் தொடர்ந்து தீவிரமாக போராடுவோம்" என்று அவர் தெரிவித்தார்.