உரிமக் கட்டணத்தைத் தவிர்க்க இறுதி நேரத்தில் 7,000 பூனைகள் பதிவு
உரிமக் கட்டணத்தைத் தவிர்க்க இறுதி நேரத்தில் ஏறக்குறைய 7,000 பூனைகள் பதிவு செய்யப்பட்டன. ஆகஸ்ட் 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 1 அதிகாலை 3 மணி வரை, அத்தனை பூனைகளுக்கு உரிமம் பெறப்பட்டது. பூனை நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் செல்லப் பூனைகளைக் கட்டணமின்றிப் பதிவு செய்ய அதிகமான உரிமையாளர்கள் கடைசி நேரத்தில் முயன்றதே அதற்குக் காரணம்.
இதுவரை செல்லப் பூனைகளைப் பதிவு செய்யாத உரிமையாளர்கள் அதனை விரைவாகச் செய்ய வேண்டும் என்று தேசிய வளர்ச்சி, வெளியுறவுத் துணை அமைச்சர் ஆல்வின் டான் ஏற்கெனவே கேட்டுக்கொண்டிருந்தார். இவ்வாண்டு ஜூலை 18ஆம் தேதியும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முன்னேரத்திலும் அவர், அந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
இக்கட்டமைப்பின்கீழ் உரிமையாளர்கள் பூனைகளுக்கு நுண்சில்லைப் பொருத்தி உரிமம் பெற 2024 செப்டம்பர் 1லிருந்து ஈராண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
உரிமத்திற்கு விண்ணப்பிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாகச் செல்லப்பிராணி உரிமையாளர்கள் சிலர் இணையத்தில் குறைபட்டுக்கொண்டனர். நள்ளிரவை நெருங்க நெருங்க, ஆகஸ்ட் 31ஆம் தேதி, விலங்குநல மருத்துவச் சேவையின் இணையத்தளத்தில் அதிக நேரம் காத்திருக்க நேரிட்டதாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து விலங்குநல மருத்துவச் சேவையின் குழும இயக்குநர் அனா வோங் கருத்துரைத்தார்.
இறுதிக் கட்ட நெரிசலைச் சமாளிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 8 மணியிலிருந்து மெய்நிகர் வரிசை முறை நடப்பில் இருந்ததாக அவர் கூறினார்.
இறுதிக் கட்டத்தில் உரிம விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என்பதை எதிர்பார்த்திருந்ததாகவும் திருவாட்டி வோங் சொன்னார்.
“இரவு 11 மணியளவில் கிட்டத்தட்ட 3,000 விண்ணப்பதாரர்கள் மெய்நிகர் அறையில் காத்திருந்தனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மெய்நிகர் வரிசையில் இணைந்த அனைவரும் பூனைகளுக்கு உரிமம் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் காலக்கெடு நள்ளிரவிலிருந்து செப்டம்பர் 1 அதிகாலை 3 மணி வரை நீட்டிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது 129,000க்கும் மேற்பட்ட செல்லப் பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏறக்குறைய 93 விழுக்காட்டுப் பூனைகளுக்குக் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் திருவாட்டி வோங் கூறினார்.
செப்டம்பர் 1 முதல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு உரிமக் கட்டணங்கள் பொருந்தும். பூனையின் வயது, இனப்பெருக்க நிலை, ஒரு வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்துக் கட்டணம் மாறுபடும்.