உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில்
உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
"தமிழகத்தில் 'எல் நினோ'வால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. "
பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதால் 'எல் நினோ' என்ற காலநிலை மாற்றம் உருவாகிறது. இதன் காரணமாக மழை மற்றும் வானிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக 'எல் நினோ' பாதிப்பானது இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் தன்மையுடையது. இதனால் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரிக்கும். இந்த நடப்பாண்டிலும் 'எல் நினோ' பாதிப்பு உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 'எல் நினோ'வால் ஏற்படும் பாதிப்புகளை அறிவியல் ரீதியாக முன்கூட்டியே மதிப்பீடு செய்து, அதற்குத் தேவையான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக, முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவுப்படி சிறப்பு நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் கண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை ஐ.ஐ.டி. நீரியல் மற்றும் நீர்வள பொறியியல் ஆய்வுக்கூட பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், உலக வளங்கள் நிறுவனத்தின் காலநிலை மீள்திறன் பிரிவு இயக்குநர் அறிவுடைநம்பி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன ஆலோசகர் ரமேஷ் ராமச்சந்திரன், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் சுகந்தி தேவதாசன் கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட் ஆகியோரும் இக்குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் மூத்த மேலாளர் பிரதீப் ஜான் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களும் இந்த சிறப்பு நிபுணர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரங்களை தீவிரமாகக் கண்காணித்தல், எல் நினோ பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து அடையாளம் காணுதல், அத்துடன் பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பரிந்துரைகளை அரசுக்கு வழங்குதல் உள்ளிட்ட முக்கியப் பணிகளை இந்த நிபுணர் குழு மேற்கொள்ளும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி