📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 10:03 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.15 வரை மழை வாய்ப்பு எப்படி?

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.15 வரை மழை வாய்ப்பு எப்படி?

கோப்பு படம்

சென்னை: தமிழகத்தில் கடலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 11-ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 10, 11 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் 11-ம் தேதி கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 12-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

15-ம் தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வரும் 13-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.