“வைபவ் சூர்யவன்ஷி இந்த திறமையை சோதிக்கணும்..”.. இங்கிலாந்து ஜாம்பவான் அலெஸ்டர் குக் கோரிக்கை
“வைபவ் சூர்யவன்ஷி இந்த திறமையை சோதிக்கணும்..”.. இங்கிலாந்து ஜாம்பவான் அலெஸ்டர் குக் கோரிக்கை
லண்டன்: இந்தியாவின் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி அடுத்து குறிப்பிட்ட கிரிக்கெட் வடிவத்தில் விளையாட வேண்டும் என குக் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த டெஸ்ட் ஜாம்பவான் குக், "ஒவ்வொரு தலைமுறையிலும் குழந்தைகள் பார்த்து ஊக்கம் பெறும் ஒரு நட்சத்திர வீரர் தேவைப்படுகிறார். இதுவரை நான் பார்க்காத அசாத்திய திறமை வைபவ் சூர்யவன்ஷியிடம் உள்ளது. வெள்ளைப் பந்து (டி20, ஒருநாள்) போட்டிகளைப் போலவே சிகப்புப் பந்து (டெஸ்ட்) கிரிக்கெட்டிலும் அவர் விளையாட முன்வர வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது திறமை என்ன என்பதை சோதித்துப் பார்க்கும் சவாலை அவர் ஏற்க வேண்டும். வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, துணிந்து முயற்சி செய்யும் வீரர்கள் தான் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவை" என்றார்.
சிறு வயதிலேயே கிரிக்கெட் உலகை அதிர வைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஷபாலி வர்மாவின் சாதனையை முறியடித்து இந்தியாவின் மிக இளம் சர்வதேச வீரர் ஆனார். கடந்த 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 35 பந்துகளில் சதம் அடித்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். தொடர்ந்து 2026 ஐபிஎல் சீசனில் 72 சிக்சர்களுடன் 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார்.
அண்மையில் தோகாவில் நடந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில், யுஏஇ அணிக்கு எதிராக 53 பந்துகளில் 28 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 204 ரன்கள் விளாசி 28 பந்துகளில் சதம் மற்றும் 52 பந்துகளில் இரட்டை சதம் என லிஸ்ட் ஏ உலக சாதனைகளை உடைத்தார். டி20 போட்டிகளில் உச்சத்தில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கால் பதித்தால் கிரிக்கெட்டுக்கு புதிய எழுச்சி கிடைக்கும் என குக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.